கம்பார், ஜனவரி 21 :
நகர்ப்புற மற்றும் குடியிருப்பு பகுதிகள், நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு நிலையான வேக வரம்பு மணிக்கு 30 கிலோமீட்டர் (30km/h) ஆக அமல்படுத்துவதற்கான திட்டத்தை போக்குவரத்து அமைச்சகம் மதிப்பாய்வு செய்யும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
இந்த வேக வரம்பு எல்லையை நிர்ணயிப்பதற்காக, மலேசிய சாலைப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தால் (Miros) முன்மொழியப்பட்ட விஷயத்தைப் பற்றி விவாதிக்க பங்குதாரர்களுடன் அமைச்சகம் ஈடுபடும் என்றார்.
“நான் மிரோஸின் இந்த முன்மொழிவை மறுபரிசீலனை செய்தேன், அதில் பல தரப்புகள் உள்ளடக்கியிருப்பதால், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் நான் விவாதிக்க அழைக்க வேண்டும்.
“மலேசியாவில், வேக வரம்புகள் மட்டுமின்றி, பல காரணிகளாலும் சாலை விபத்துகள் நிகழ்கின்றன,” என்று அவர் இன்று இங்கு துங்கு அப்துல் ரஹ்மான் (Utar) பல்கலைக்கழக மருத்துவமனைக்கான MCA நிதி திரட்டும் விழாவை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த விழாவில் MCA துணைத் தலைவர் டத்தோ டாக்டர் மா ஹாங் சூன், மற்றும் துணைக் கல்வி அமைச்சரும், Utar அதிபருமான துன் டாக்டர் லிங் லியோங் சிக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வேகவரம்பு எல்லையாக 30km/h முதல் 50km/h வரையிலான கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டவுடன், அது கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதையும் வீ ஒப்புக்கொண்டார்.
“இதற்கு கலவையான எதிர்வினைகள் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் நாங்கள் எல்லா கோணங்களையும் கவனிப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த விவாதத்தில் பொதுப்பணித் துறை, சாலைப் போக்குவரத்துத் துறை, உள்ளாட்சி மன்றங்கள், காவல்துறை மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளை உள்ளடக்கிய பங்குதாரர்களை மிரோஸ் நிறுவனம் ஈடுபடுத்தும் என்று கடந்த ஆண்டு, மிரோஸ் இயக்குநர் ஜெனரல் கைரில் அன்வர் அபு காசிம்கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வேக வரம்பு நிர்ணயமானது, மக்கள் சாலைப் போக்குவரத்தில் பாதுகாப்பாக ஈடுபடவும், சமூகம் பாதுகாப்பான, ஆரோக்கியமான, பசுமையான மற்றும் வாழக்கூடிய இடத்தை உருவாக்கவும் உதவும் என்று கைரில் கூறியிருந்தார்.




















