ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற வாலிபரது காணொளி சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, அவர் போலீசில் சரணடைந்தார்

போர்ட்டிக்சன், ஜனவரி 31 :

சிரம்பான் – போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற வாலிபர் ஒருவரின் காணொளி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை தொடர்ந்து, அந்த ஆடவர் இன்று போலீசில் சரணடைந்தார்.

போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் அய்டி ஷாம் முகமட் கூறுகையில், கடந்த சனிக்கிழமையன்று இளைஞர்கள் குழு ஒன்று மோட்டார் சைக்கிள் ஓட்டிச் செல்வதைக் காட்டும் காணொளிப் பதிவு குறித்து தங்களுக்கு புகார் கிடைத்தது.

“நேற்று காலை 9 மணியளவில், நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் போது ஆபத்தான செயல்களைச் செய்ய பயன்படுத்தப்பட்ட, மோடெனாஸ் கிரிஸ் 120 மோட்டார் சைக்கிளை காவல்துறை கண்டுபிடித்தது.

“அத்தோடு, தகவலின் பேரில் போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) போக்குவரத்து பிரிவு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கண்காணித்து வந்தது.

இவ்வாறு இருக்கையில், இன்று காலை 9.45 மணியளவில், போலீசார் அவரை தேடுவதை அறிந்த அந்த 17 வயது இளைஞர் போலீசாரிடம் சரணடைந்தார்,” என்று இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 பிரிவு 42 (1)ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here