சிரியான், பிப்ரவரி 6 :
இங்குள்ள ஜாலான் கம்போங் பான் ரிமு என்ற இடத்தில், நேற்று மாலை அவர் ஒட்டிச் சென்ற லோரி விபத்தில் சிக்கிய பின், மர்மமான நிலையில் காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த லோரி ஓட்டுநர் நேற்று இரவு, கவிழ்ந்த வாகனத்துக்கு அடியில் புதைக்கப்பட்ட நிலையில், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
அலெக்சாண்டர் அலோன், 20, என்ற ஆடவரே 5 மணி நேரத்திற்கும் மேலாக தேடுதல் முயற்சிகளுக்குப் பிறகு இரவு 11.10 மணியளவில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.
மலேசியாவின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு மையத்தின் (PGO) செய்தித் தொடர்பாளர் இதுபற்றிக் கூறுகையில், மாலை 6 மணியளவில் செம்பனம் பழங்களை ஏற்றிவந்த லோரி மற்றும் பிக்கப் சம்பந்தப்பட்ட விபத்து தொடர்பாக தங்களுக்கு அழைப்பு வந்தது.
தகவல் கிடைத்ததும் சிரியான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (BBP) 6 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.
“சம்பவ இடத்திற்கு வந்தபோது, இரண்டு வாகனங்களும் சாலையோரத்தில் கவிழ்ந்திருப்பது கண்டறியப்பட்டது, மேலும் பிக்கப்பில் இருந்த மூன்று நபர்கள் அகற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அதே நேரத்தில் லோரி ஓட்டுநர் ஒருவரும் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டார்.
“எவ்வாறாயினும், சம்பவத்தின் போது தன்னுடன் மற்றுமொரு ஓட்டுநர் இருந்ததாக மீட்கப்பட்ட லோரி ஓட்டுநர் தெரிவித்ததோடு,காணாமல் போன மற்றைய ஓட்டுநரின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைக்க முயற்சித்த போதும் அதற்கு பதிலளிக்கவில்லை” என்று அவர் கூறினார்.
அதன் விளைவாக, பாதிக்கப்பட்டவரைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் பாதிக்கப்பட்டவரின் நிலையைக் கண்டறிவதில் மீட்புக் குழு சிரமங்களை எதிர்கொண்டது.
“அருகில் உள்ள செம்பனம் பழங்கள் மற்றும் புதர்களின் குவியல்களின் கீழ் தேடுதல் நடத்தப்பட்டது, ஆனால் பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
“ஐந்து மணி நேரத்திற்கும் மேலான தேடுதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர் இறுதியாக சாலையோரத்தில் கவிழ்ந்த லோரியின் இயந்திரப்பகுதிக்கு அடியில் ‘புதைக்கப்பட்ட நிலையில்’ கண்டுபிடிக்கப்பட்டார்,” என்று அவர் கூறினார்.
அந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டதாகவும், மேலதிக நடவடிக்கைகளுக்காக அவரது சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.