‘இராணுவ பயிற்சி நிறைவு, படைகள் முகாம் திரும்புகின்றன’- ரஷியா வெளியிட்ட அறிவிப்பால் உலக நாடுகள் நிம்மதி!

மாஸ்கோ, பிப்ரவரி 16 :

உக்ரைன் எல்லையில் உள்ள கிரிமியாவில், இராணுவ பயிற்சி நிறைவு பெற்றதாக இன்று ரஷியா அறிவித்துள்ள நிலையில், ரஷியாவின் இந்த அறிவிப்பால் போர் பதற்றம் சற்று தணிந்துள்ளது.

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூழும் அபாயம் காணப்பட்டது. இந்த நிலையில் ரஷியா படையெடுக்கும்பட்சத்தில் உக்ரைனுக்கு ஆதரவு அளிப்போம் என அமெரிக்கா, நேட்டோ படைகள் தெரிவித்தன.

மேலும், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பில் உள்ள சில நாடுகள் ஆயுதங்களை அனுப்பி வைத்தன. இதனால், ரஷியா – உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வந்தது. போர் பதற்றத்தை தணிக்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வந்தன.

அதேவேளை உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணமில்லை என ரஷியா தெரிவித்து வந்தபோதும், கிரிமியா உள்ளிட்ட உக்ரைன் எல்லையில் உள்ள பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகளை குவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது.

இதற்கிடையில், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியிலான முயற்சிக்கு பின்னர் எல்லையில் இருந்து சில வீரர்களை முகாமுக்கு திரும்ப உத்தரவிட்டுள்ளதாக ரஷியா நேற்று அறிவித்தது.

இந்நிலையில், கிரிமியா தீபகற்ப பகுதியில் நடைபெற்று வரும் இராணுவ பயிற்சியை நிறைவு செய்வதாக ரஷியா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், கிரிமியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து வீரர்களும் முகாமிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனதாகவும் ரஷியா அறிவித்துள்ளது.

அதேபோல், அனைத்து படைகளும் முகாமுக்கு திரும்பி வருகின்றன என்று ரஷியா அறிவித்துள்ள நிலையில், ரஷியாவின் இந்த அறிவிப்பால் உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் சற்று தணிந்து வருகிறது.

மூன்றாம் உலகபோர் மூழுமா என்ற அச்சத்தில் இருந்த உலகநாடுகளுக்கு, ரஷியாவின் இந்த அறிவிப்பால் தற்போது அந்த அச்சம் நீங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here