ஜோகூர் பாரு, பிப்ரவரி 18 :
சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளி தொடர்பில், பெண் பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளை ஆபத்தான முறையில் ஓட்டி, சாகசத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
வட ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ரூபியா அப்துல் வாஹிட் இதுபற்றிக் கூறுகையில், நேற்று பிற்பகல் 3 மணியளவில் சமூக ஊடகங்களில் வைரலான காணொளி தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்தது என்றார்.
36 வினாடிகள் கொண்ட காணொளியில், ஒரு நபர் ஹோண்டா EX5 மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்பிள்ளையையும் வைத்துக்கொண்டு ஆபத்தான முறையில் ஓட்டுவதைக் காட்டியது.
இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987ன் பிரிவு 42ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், RM5,000க்கு குறையாமலும், RM15,000க்கு மிகாமல் அபராதமும் விதிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
“இந்த வழக்கில், வாகன பதிவு எண் விவரக்குறிப்புகளுக்கு ஏற்ப இல்லாதது, சாலை வரி காலாவதியானது மற்றும் தலைக்கவசம் அணியாதது உள்ளிட்ட மூன்று சம்மன்களும் வழங்கப்பட்டன.
தங்களுக்கு அல்லது சாலையில் செல்வோருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனங்களை ஓட்ட வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்துகின்றனர்,” என்றார்.