பாசீர் பூத்தே, பிப்ரவரி 21 :
கடந்த வாரம் பெய்த கனமழையைத் தொடர்ந்து, பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் நஷ்டமடைந்த பாச்சோக் மற்றும் பாசீர் பூத்தே மாவட்டங்களைச் சுற்றியுள்ள சுமார் 500 தர்பூசணி வேளண்மை விவசாயிகளுக்கு உதவ வேளாண் மற்றும் உணவுத் தொழில் அமைச்சகம் (MAFI) ஒரு கணக்கெடுப்பை நடத்தி வருகிறது.
வேளாண்மை மற்றும் உணவுத் தொழில்துறை துணை அமைச்சர் II டத்தோ டாக்டர் நிக் முஹமட் ஜவாவி சலே இதுபற்றிக் கூறுகையில், விவசாயத் துறை மற்றும் விவசாயிகள் அமைப்பு ஆணையம் பாதிக்கப்பட்ட விவசாயிகளை விரைவில் கண்டறிந்து, அவர்களுக்கு உதவி செய்யுமாறு தமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
“நல்ல வடிகால் அமைப்பு இருந்தும் கூட, கடந்த வாரம் பெய்த கனமழையின் விளைவாக, அதிகப்படியான நீர் அருகிலுள்ள கடற்கரை பகுதிக்கு செல்ல முடியவில்லை.
“இதனால் விவசாயிகள் கிட்டத்தட்ட 2 மில்லியன் வெள்ளி இழப்பை சந்தித்தனர்,” என்று அவர் இன்று பாசீர் பூத்தே நாடாளுமன்ற அலுவலக மைதானத்தில் MAFI பிரிஹாடின் உதவியை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பாசீர் பூத்தே எம்.பி.யான டாக்டர் நிக் முஹமட் ஜவாவி மேலும் கூறுகையில், உழவுக் கட்டணம் மற்றும் பெரிய அளவிலான மூலதனம் தேவைப்படும் உரங்கள் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களுடனான விவசாயிகளின் கடன்களையும் கருத்தில் கொண்டே இந்த உதவி வழங்கப்படுகிறது.
“இந்த தர்பூசணி பயிர் இழப்பு ரமலான் மாதம் மற்றும் ஹரி ராயா ஐடில்பித்ரி கொண்டாட்டங்களின் போது, அதன் விநியோகத்தை பாதிக்காது, ஏனெனில் அந்த மாதங்களில் அறுவடை செய்யக்கூடிய வேறு பல பகுதிகள் பாதுகாப்பாக உள்ளன,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், 62 வயதான விவசாயி ஷஃபியா மன்சோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனது பயிர்கள் அழிக்கப்படாமல் இருந்திருந்தால், அடுத்த இரண்டு வாரங்களில் RM30,000 முதல் RM40,000 வரை அறுவடை செய்திருக்க முடியும் என்றார்.
“இரண்டு ஹெக்டேரில் எனது தர்பூசணிப் பயிரைப் பயிரிடுவதற்கு நான் RM15,000 மூலதனமாகச் செலவிட்டேன், அரசாங்கத்தின் இந்த் உதவியுடன் நான் எனது குடும்பத்தை பார்த்துக்கொள்ள முடியும் ,” என்று அவர் கூறினார்.