இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில், எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர் பலி!

கோத்தா பாரு, மார்ச் 11 :

இங்குள்ள ஜாலான் பெங்கலான் சேப்பாவில், இன்று அதிகாலை நடந்த விபத்தில் சிஜில் பெலாஜாரான் மலேசியா (SPM) பரீட்சாத்தி ஒருவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அவர் இறந்தார்.

அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 17 வயதான முஹமட் ஹைகல் அட்னான் முகமட் நோர் என்ற அந்த மாணவன் தலையில் பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கோத்தா பாரு மாவட்ட காவல்துறையின் செயல் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் சுஹைமி அலி இதுபற்றிக் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் ஹோண்டா சி100பி மோட்டார் சைக்கிளில் பெங்காலான் சேப்பாவிலிருந்து கோத்தா பாருவுக்கு செல்லும் சாலையின் இடது பாதையில் சென்று கொண்டிருந்தார்.

“சம்பவ இடத்திற்கு வந்ததும், போக்குவரத்துக்கு எதிராக ஒரு பதின்மவயது பெண் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிளுடன் மோதிக் கொண்டதில், இருவரும் கீழே விழுந்தனர்,

பாதிக்கப்பட்ட இளைஞன் தலையில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டது,” என்று அவர் கூறினார்.

மேலும் 15 வயது சிறுமிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் ராஜா பெரெம்புவான் ஜைனாப் II மருத்துவமனையில் (HRPZ II) சிகிச்சை பெற்றதாகவும் முகமட் சுஹைமி கூறினார்.

அவரது கூற்றுப்படி, சம்பவத்தில் உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக Hospital Universiti Sains Malaysia (HUSM) குபாங் கெரியானுக்கு கொண்டு செல்லப்பட்டது.

“இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் (ஏபிஜே) 1987 பிரிவு 41 (1) இன் படி விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here