புத்ராஜெயா, மார்ச் 17 :
திங்கள்கிழமை தொடங்கும் 2022/2023 கல்வி அமர்வில் வகுப்பறைகளுக்கு வெளியே விளையாட்டு மற்றும் இணை பாடத்திட்ட நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும் என்று மூத்த கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் தெரிவித்துள்ளார்.
இன்று, கல்வி அமைச்சின் சிறந்த சேவை விருது வழங்கும் நிகழ்வில், கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த தளர்வு தொடர்பாக கோவிட்-19ஐ தடுப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) அமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என்றும் ரட்ஸி கூறினார்.
“இதுவரை வகுப்பறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் எங்கள் குழந்தைகளுக்கு இது நிச்சயமாக நல்ல செய்திதான். மாணவர்களும் ஆசிரியர்களும் கோவிட்-19 உடன் வாழும் நிலை மாறுவதற்குப் பழகிக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
ஜூன் 10, 2020 அன்று, கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து பள்ளிகளில் ஒன்றுகூடுவது உட்பட அனைத்து விளையாட்டு மற்றும் இணை பாடத்திட்ட நடவடிக்கைகளுக்கும் அமைச்சகம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.