சிங்கப்பூரில் கோவிட் -19 தடுப்பூசிக்கு பதிலாக உப்பு கரைசல் செலுத்திய டாக்டர் கைது!

சிங்கப்பூர், மார்ச் 29 :

சிங்கப்பூரில் உயர் பதவியில் இருக்கும் மருத்துவர் ஒருவர், நோயாளிகளுக்கு கோவிட் -19 தடுப்பூசிக்கு பதிலாக உப்பு கரைசலை ஊசி வழியாக செலுத்திய புகாரில் கைது செய்யப்பட்டார்.

33 வயதான டாக்டர் குவா என்பவர், போலியாக நோயாளிகள் பெயரில் கணக்கை தொடங்கி, அந்த நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக முடிவுகளை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் தடுப்பூசிக்கு எதிரான குழுவில் ஒரு உறுப்பினராக உள்ளவர். இதனால் தவறான தடுப்பூசி தகவல்களை சுகாதார அமைச்சகத்தின் தேசிய நோய்த்தடுப்பு பதிவேட்டில் பதிவேற்றி வந்துள்ளார்.

இதனையடுத்து, மருத்துவப் பயிற்சியாளராக அவர் பதிவு செய்ததை, சிங்கப்பூர் மருத்துவக் கவுன்சில் (எஸ் எம் சி) மார்ச் 23 முதல், 18 மாதங்களுக்கு வேலையிலிருந்து இடைநீக்கியுள்ளது. அவரது இடைநீக்கம் “பொது உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் பொது நலனுக்காக அவசியம்” என்று மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது

மேலும், தவறான தடுப்பூசி தரவுகளை சமர்ப்பித்து சுகாதார அமைச்சகத்தை ஏமாற்ற சதி செய்ததாக அவர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

தடுப்பூசிக்கு எதிராக செயல்பட்டு வருவதால், தன்னிடம் கோவிட் -19 தடுப்பூசி செலுத்த வரும் நோயாளிகளுக்கு, கோவிட் -19 தடுப்பூசிக்கு பதிலாக உப்பு கரைசலை ஊசி வழியாக செலுத்தி, அதன்பின் அந்த நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதாக அவர் தேசிய பதிவேட்டில் பதிவேற்றி வந்துள்ளார்.

இந்த போலியான உப்பு கரைசலை தடுப்பூசி என கூறி, நோயாளிகளுக்கு செலுத்திய பின் அந்த நோயாளிகளிடமிருந்து அதிக கட்டணத்தையும் அதற்காக வசூலித்துள்ளதுடன் நோயாளிகளிடம் அவர்களுக்கு தடுப்பூசி வெற்றிகரமாக செலுத்தப்பட்டு விட்டது என்பதற்கான போலி சான்றிதழையும் கொடுத்து அவர்களை ஏமாற்றியுள்ளார்.

அவரது நடவடிக்கைகள் பொது சுகாதார விளைவுகளை ஏற்படுத்துகின்றன. தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அவர் தவறிவிட்டார் என்று சிங்கப்பூர் மருத்துவக் கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் வழக்கை விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் கவுன்சில் தெரிவித்துள்ளது.

அவருக்கு உதவியாக இருந்துவந்த அவரது உதவியாளர் தாமஸ் சுவா செங் சூன் என்பவர் மீதும் சுகாதார அமைச்சகத்தை ஏமாற்ற சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டாக்டர் குவா கடந்த ஜனவரி 21ம் தேதியன்று, அவரது உதவியாளர் தாமஸ் சுவா (40 வயது) மற்றும் ஐரிஸ் கோ என்ற நபர் ஆகியோருடன் சேர்த்து கைது செய்யப்பட்டார். ஐரிஸ் கோ(46 வயது) என்பவர் நோயாளிகளை ஏமாற்றி, டாக்டர் குவாவிடம் செல்லும்படி பரிந்துரை செய்த நபர் ஆவார்.

சிங்கப்பூர் பெண் ஒருவர் சினோபார்ம் தடுப்பூசியை செலுத்திக்கொண்டதாக தவறான தகவல்களை தேசிய பதிவேட்டில் கொடுத்துள்ளனர் என்று அவர்கள் மூவர் மீதும் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், டாக்டர் குவா நடத்திவந்த 4 கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளன.

நோயறிதல் மேம்பாட்டு மையத்தின் மருத்துவ நோயறிதல் ஆய்வகத்தில் டாக்டர் குவா ஆய்வக இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார். இந்த ஆய்வகம் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையால் நிதியளிக்கப்படுகிறது மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிக்கான அமைப்புகளால் வழிநடத்தப்படுகிறது. அந்த பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

சாதாரண உப்பு கரைசலை வைத்துக்கொண்டு மொத்த சிங்கப்பூரையும் கலக்கிய இந்த கும்பலை பற்றிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here