ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்திய டெட்சுயா யமகாமி யார்?

டோக்கியோ, ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேல்சபைக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இந்நிலையில், தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்க நேற்று, மேற்கு ஜப்பானின் நாரா பகுதியில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது டெட்சுயா யமகாமி என்ற 41 வயது நபரால் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார். உலக அரங்கில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜப்பானில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரிதாக நடைபெறுபவை. சுமார் நூறு ஆண்டுகளில் ஜப்பானின் பதவியில் இருந்த அல்லது முன்னாள் பிரதமர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது இதுவே முதல் முறை.

ஜப்பானில் ஆயுதங்கள் மீதான கடுமையான சட்டங்கள் காரணமாக பொதுமக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தும் சம்பவங்கள் கேள்விப்படாதவை. ஜப்பானில் கைத்துப்பாக்கிகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன. எனினும், ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு அவர் தப்பிக்க முயற்சிக்கவில்லை என்று தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.

துப்பாக்கிசூடு நடந்ததும் உடனடியாக சம்பவ இடத்தில் இருந்த பாதுகாப்புப் படையினரால் டெட்சுயா யமகாமி கைது செய்யப்பட்டதுடன், அப்பகுதியில் இருந்து ஒரு துப்பாக்கியும் மீட்கப்பட்டது. டெட்சுயா யமகாமியைப் பொறுத்தவரை, அந்த துப்பாக்கியை 3டி பிரிண்டிங்கைப் பயன்படுத்தி செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. துப்பாக்கியால் சுட்ட டெட்சுயா யமகாமி, ஷின்சோ அபே மீது அதிருப்தி இருந்ததாகவும், அவரைக் கொல்ல விரும்பியதாகவும் காவல்துறையிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அவர் ஜப்பானில் நாரா நகரில் வசிப்பவர் ஆவார். அவர் ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படை என அழைக்கப்படும் ஜப்பானிய கடற்படையில் முன்பு இருந்துள்ளார். டெட்சுயா யமகாமி 2000 ஆம் ஆண்டு ஜே.எம்.எஸ்.டி.எப் கடல்சார் தற்காப்பு படையில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபே படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது வீட்டை போலீஸார் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனர். அங்கு வெடிபொருட்கள் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் போன்ற பொருட்களை அவர்கள் கண்டுபிடித்தனர். யமகாமி வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார். இருப்பினும், அவர் 2020ம் ஆண்டில் இருந்து கன்சாய் பிராந்தியத்தில் ஒரு உற்பத்தியாளரிடம் பணிபுரிந்தார்.அதன்பின், அவர் இந்த ஆண்டு மே மாதம் வேலையை விட்டுவிட்டார்.

அவர் ஆரம்பத்தில் ஒரு மதக் குழுவின் தலைவரைத் தாக்க திட்டமிட்டார். யமகாமியின் தாயார் அந்த மதக் குழுவிற்கு நன்கொடை வழங்கியதால், திவாலாகிவிட்டார் என்று அவர் நம்பினார். அதனால் அந்த குழுவின் தலைவரைத் கொல்ல திட்டமிட்டிருந்தார். அப்படியிருக்கையில், ஷின்சோ அபே பிரச்சார உரைகளை ஆற்றிய மற்ற இடங்களுக்கும் அவர் சென்றிருந்தார். அவரை நோட்டமிட்டு வந்துள்ளார். அதே வேளையில், அபேயின் அரசியல் நம்பிக்கையை எதிர்த்ததால் அவரை கொன்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here