ஒப்பந்தத்தை மீறி, உக்ரைன் போர்க்கப்பலை தாக்கி அழித்த ரஷிய படை

கீவ், ஜூலை 25-

ஒப்பந்தத்தை மீறி உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்திய ரஷிய படை, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உக்ரைன் போர்க்கப்பலை தாக்கி அழித்தது.

உக்ரைன் உலகின் மிகப்பெரிய தானியங்கள் ஏற்றுமதியாளராக இருந்து வரும் சூழலில், அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய ரஷியா, கருங்கடல் பகுதியில் போா்க் கப்பல்களை நிறுத்தி அந்த கடல் வழியாக உக்ரைன் தானியங்கள் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தடை ஏற்படுத்தியது.

இது அனைத்துலக அளவில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியதால், தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை ஐ.நா. முன்னெடுத்தது.

அதன் பலனாக கடந்த வெள்ளிக்கிழமை தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷியாவும், உக்ரைனும் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தத்தில் கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைன் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என ரஷியா உறுதியளித்திருந்தது.

ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரத்திலேயே ஒப்பந்தத்தை மீறி கருங்கடலில் உள்ள உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின.

துறைமுகத்தின் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்கியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. எனினும் தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உக்ரைன் தெரிவிக்கவில்லை.

ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட இந்த தாக்குதலை ஐ.நா. வன்மையாக கண்டித்தது. இந்த நிலையில் ஒடேசா துறைமுகத்தில் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒடேசா துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த உக்ரைனின் போர் கப்பல் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

காட்டுமிராண்டித்தனம் என சாடல் அதுமட்டும் இன்றி ஒடேசா துறைமுகத்தில் அமெரிக்காவால் வழங்கப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆயுத கிடங்கும் நிர்மூலமாக்கப்பட்டதாக ரஷியா ராணுவம் கூறியது. எனினும் இது குறித்து உக்ரைன் தரப்பு உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இதனிடையே ஒப்பந்தத்தை மீறி ஒடேசா துறைமுகம் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது காட்டுமிராண்டித்தனம் என சாடிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்த தாக்குதல் ரஷியாவுடனான பேச்சுவார்த்தைக்கான சாத்தியத்தை அழித்துவிட்டதாக கூறினார்.

அதே சமயம் ஒப்பந்தத்தில் வெளிப்படையான மீறல் இருந்தபோதிலும் தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வருவதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here