சீனாவில் வெப்ப அலை பரவல்: பயிர்கள், மக்களுக்கு அச்சுறுத்தல்

சீனாவில் கொரோனா பெருந்தொற்றால் அந்நாட்டின் ஷாங்காய் நகர் உள்ளிட்ட பல பகுதிகள் சமீபத்தில் பெரும் பாதிப்புகளை சந்தித்தன. இந்நிலையில், சீனா முழுவதும் ஜூன் 13ந்தேதியில் இருந்து கடுமையான வெப்ப அலைகள் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கின.

இந்த வெப்ப அலைகள் தொடர்ந்து, ஆகஸ்டு மாதம் 2வது வாரம் வரை நீடித்திருக்கும் என்று குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. 2022ம் ஆண்டுக்கான வெப்ப அலை முன்பே வந்து விட்டது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையத்துடன் தொடர்புடைய தேசிய வானிலை மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் சன் ஷாவோ கூறியுள்ளார்.

இதனால், வடமேற்கு சீனாவின் ஷாங்சி மாகாணத்தின் தென்கிழக்கு உள்ளிட்ட பகுதிகள், கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் வடகிழக்கு பகுதிகளில் 40 டிகிரி செல்சியசுக்கும் கூடுதலான வெப்ப அலைகள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது.

வடக்கு சீனாவின் ஹெபய் மாகாணத்தில் மொத்தம் 71 தேசிய வானிலை ஆய்வு மையங்களில் வெப்பநிலை சாதனை பதிவை கடந்து உள்ளது. அவற்றில் லிங்ஷூ நகரில் 44.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. நாட்டின் பல பகுதிகளில் வருகிற 31ந்தேதி முதல் ஆகஸ்டு 15ந்தேதி வரை முந்தின ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக அதிக வெப்பம் பதிவாகும் என குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

சீனாவின் நடப்பு ஆண்டின் முதல் பாதியில் கடுமையான ஊரடங்குகள் மற்றும் பரிசோதனை நடைமுறைகளால் மக்களின் வாழ்க்கை முறை வெகுவாக பாதிக்கப்பட்டது. சீனாவில் கொரோனா பெருந்தொற்றில் இருந்தே மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்த சூழலில், அவர்களுக்கு சவால் விடும் வகையில் வெப்ப அலையும் சேர்ந்து இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டு வருகிறது.

இதனால், சீன மக்களை காக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் உள்ளது. இதனை தொடர்ந்து, வருகிற மாதத்தில் தீவிர வெப்ப அலையை எதிர்கொள்ள வேண்டிய அனைத்து வழிகளையும் மேற்கொள்ள மக்கள் தயாராகி வருகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக, ஷாங்காய் நகரில் யுயுவான் கார்டன் பகுதியில் உள்ள கடைகள், வெப்ப தடுப்பு உபகரணங்களை பயன்படுத்த தொடங்கி உள்ளன.

சீனாவில் தொடர் வெப்ப அலையால், பல பகுதிகளில் வெப்ப காற்று ஒரு போர்வை போன்று படர்ந்து உள்ளது. இதனால், ஷாங்காய், சீனாவின் தென்மேற்கே அமைந்த சிச்சுவான் மாகாணம் மற்றும் கிழக்கு சீனாவின் ஜியாங்சு மற்றும் ஜெஜியாங் மாகாணங்களில் தீவிர தாக்கம் காணப்படுகிறது. வெப்பநிலை 44 டிகிரி செல்சியசுக்கு கூடுதலாக பதிவாகி உள்ளது.

இந்த வெப்ப அலையால், கடந்த ஜூனில் ஏற்பட்டு உள்ள சராசரி வெப்பநிலையானது, 1873ம் ஆண்டில் இருந்து இதுவரை ஏற்பட்ட வெப்பநிலையை விட அதிகம் ஆகும் என சன் ஷாவ் கூறியுள்ளார். கடந்த சனி கிழமை ஜின்ஜியாங் மற்றும் கிழக்கு ஜெஜியாங் மாகாணங்களில் வெப்பநிலையானது 40 டிகிரியை கடந்தது. ஜின்ஜியாங்கில் வெப்ப நிலை எச்சரிக்கை ஆரஞ்சு வண்ணத்தில் இருந்து சிவப்பு வண்ணத்திற்கு அதிகரித்து உள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, துர்பான், ஜின்ஜியாங்கில் வெப்பநிலை 43.2 டிகிரி செல்சியசை அடைந்து உள்ளது என அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சீனாவில் வெப்ப அலை பரவலால் பயிர்கள் பாதிக்கப்பட கூடிய ஆபத்தும் உள்ளது. பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலும் ஏற்பட்டு உள்ளது. இதனால், மக்கள் வெப்பத்தில் இருந்து தப்பிக்க மேற்கொள்ளும் வழிகளால் மின்சார உபயோகம் அதிகரித்து உள்ளது. உலக வானிலை ஆய்வு மையத்தின் பொது செயலாளர் கூறும்போது, பருவகால மாற்றங்களால் வெப்ப அலைகள் அதிக அளவில் இருக்கும் என கடந்த வாரம் எச்சரிக்கை வெளியிட்டார்.

இதேபோன்று, ஐரோப்பிய பகுதிகளில் பிற பகுதிகளில் இல்லாத வகையில், வெகுசீக்கிரத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் சூழல் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் முன்பே வெப்பநிலை அதிகரித்து காட்டுத்தீ உள்ளிட்டவை மக்களை அச்சுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here