கோத்தபயவுக்கு வந்த சோதனை.. வெளியே தலை காட்ட கூடாதாம்.. நிபந்தனை விதிக்கும் தாய்லாந்து போலீசார்

பேங்காக், சிங்கப்பூரில் இருந்து தற்போது தாய்லாந்து நாட்டில் இருக்கும் கோத்தபய ராஜபக்சேவை, பாதுகாப்பு காரணங்களுக்காக எக்காரணம் கொண்டும் ஓட்டலை விட்டு வெளியே வரவேண்டாம் என தாய்லாந்து போலீசார் கேட்டுக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை முட்டும் அளவுக்கு எகிறியது.இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் கொதித்தெழுந்து அந்நாட்டின் அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக பெரியளவில் போராட்டம் நடத்தினர்.

சிங்கப்பூரில் விசா முடிந்தது

மக்களின் தீவிர கிளர்ச்சியால், இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த மாதம் 13-ம் தேதி இலங்கையை விட்டு வெளியேறினார். மாலத்தீவு சென்ற அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் சிங்கப்பூருக்கு பறந்தார். அங்கிருந்தபடியே இலங்கை அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். சிங்கப்பூரில் அவருக்கு முதலில் 14 நாட்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்பட்டது.

இதன் பின்னர் கடந்த 11-ம் தேதி வரை அவருக்கு சிங்கப்பூரில் தங்க அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்றுடன் அவருக்கு சிங்கப்பூரில் விசா முடிந்தது. இதனால் அவர் சிங்கப்பூரில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

தாய்லாந்தில் கோத்தபய

சிங்கப்பூரில் இருந்து ராணுவ விமானம் மூலம் தாய்லாந்துதுக்கு கோத்தபய ராஜபக்சே புறப்பட்டார். விமானத்தில் கோத்தபய ராஜபக்சே மற்றும் மேலும் மூன்று நபர்களும் பயணித்ததாக தகவல்கள் வெளியாகின. அங்கு தலைநகர் பாங்காக்கில் கோத்தபய ராஜபக்சே தங்கியிருக்கிறார். தாய்லாந்து நாடும் மனிதாபிமான அடிப்படையில் தான் கோத்தபய ராஜபக்சேவுக்கு நாட்டில் தங்குவதற்கு அனுமதித்துள்ளதாக கூறியுள்ளது.

தகவல் முன்கூட்டியே கசிந்ததா?

தாய்லாந்து நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு பேங்காக்கில் உள்ள டான் முயாங் சர்வதேச விமான நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள ராணுவ விமான நிலையத்தில் கோத்தபய ராஜபக்சேவின் விமானம் தரையிறங்கியது. முன்னதாக மலைகள் மற்றும் தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய புகெட் மாகாணத்தில் தான் கோத்தபய ராஜபக்சேவின் விமானம் தரையிறங்க திட்டமிட்டு இருந்தது.

ஆனால், இந்த தகவல் முன்கூட்டியே கசிந்து இருக்கலாம் என தகவல் பரவியதால் ராணுவ விமானம் பேங்காக்கிற்கு திருப்பிவிடப்பட்டதாக தாய்லாந்து நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

எக்காரணம் கொண்டும் வெளியே வரவேண்டாம்

தற்போது பாங்காங்கில் உள்ள சொகுசு ஓட்டலில் கோத்தபய ராஜபக்சே தங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், எந்த ஓட்டலில் தங்கியிருக்கார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. கோத்தபய ராஜபக்சேவின் பாதுகாப்புக்காக சாதாரண உடையில் போலீசார் ஓட்டலை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

பாதுகாப்பு காரணங்களுக்காக தாய்லாந்தில் தங்கியிருக்கும் வரை ஓட்டலை விட்டு எக்காரணம் கொண்டும் வெளியே வரவேண்டாம் என தாய்லாந்து போலீசார் கோத்தபய ராஜபக்சேவை கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

90 நாள் விசா காலம்

இலங்கையில் இருந்து தப்பி ஓடிய பிறகு கோத்தபய ராஜபக்சே இதுவரை பொதுவெளியில் தலைகாட்டவில்லை. தாய்லாந்தில் தற்போது தங்கியிருக்கும் கோத்தபய ராஜபக்சே தனது 90 நாள் விசா காலம் முடிந்ததும் அங்கிருந்து இலங்கைக்கு திரும்பலாம் என்று இலங்கையின் முன்னணி நாளிதழ்கள் ஏற்கனவே செய்திகள் வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here