உலு லங்காட், ஆகஸ்ட் 15 :
இங்குள்ள சுங்கை கபாய் நீர்வீழ்ச்சி அருகே மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பேர், நேற்று அங்கு நீர் ஊற்று பெருக்கில் சிக்கிக் கொண்டு மிகவும் கடினமான நிலையை எதிர்கொண்டனர்.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில இயக்குநர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், பண்டார் துன் ஹுசைன் ஓன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாலை 5.24 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அவரது கூற்றுப்படி, 20 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் மலை ஏறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் அப்பகுதியில் திடீரென நீர் ஊற்று பெருகியதன் காரணமாக 50 மீட்டர் உயரம் கொண்ட மலையில் சிக்கிக்கொண்டனர் என்றார்.
“தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, தண்ணீர் குறைந்துவிட்டது, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் காயம் ஏற்படவில்லை”.
“தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பாக மலையடிவாரத்திற்கு அழைத்துச் சென்றனர்,” என்று அவர் நேற்று இரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.