அரசியலமைப்பை மீறியதால் தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவை அந்நாட்டு கோர்ட்டு பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது. தாய்லாந்து அரசியலமைப்பு சட்டத்தின்படி பிரதமரின் பதவிக்கால வரம்பை மீறியதாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தாய்லாந்தில் கடந்த 2014-ம் ஆண்டில் ஆட்சியை கவிழ்த்து இராணுவ ஆட்சியை அமைத்து பிரயுத் பிரதமரானார்.

அதன்பின் 2017-ம் ஆண்டில் இராணுவத்தால் நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார். அந்நாட்டு அரசமைப்பின் படி 8 ஆண்டுகள் பிரதமராக பதவியில் நீடிக்கலாம். அதன்படி, கடந்த ஆகஸ்ட் 24, 2014 அன்று அதிகாரப்பூர்வமாக பிரதமராக பதவியேற்றார்.

அவர் பதவியேற்று நேற்றுடன் 8 ஆண்டு முடிந்துவிட்ட நிலையில், அவர் சட்டத்தை மீறியிருப்பதாக கூறி அந்நாட்டு அரசியலமைப்பு கோர்ட்டில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், 2017-ல் பிரதமராக பதவியேற்றதில் இருந்து, பதவிக் காலம் கணக்கிடப்பட வேண்டும் என்று பிரயுத் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.

இந்த நிலையில், பதவிக்கால வரம்பை மீறியதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை பரிசீலனைக்கு ஏற்ற கோர்ட்டு, பிரயுத்தை சஸ்பெண்ட் செய்தது. மேலும், புகாரின் நகலைப் பெற்ற 15 நாட்களுக்குள் பிரயுத் தனது வாதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என தெரியவில்லை.

இது குறித்து அந்நாட்டு அரசு செய்திதொடர்பாளர் கூறுகையில், கோர்ட்டு தீர்ப்பை மதித்து பிரதமரின் பணிகளை பிரயுத் நிறுத்தி விட்டார். துணைப் பிரதமர் பிரவித் வாங்சுவான் தற்காலிக பிரதமராக செயல்படுவார். இந்த சஸ்பெண்ட் அரசுப்பணிகளை எந்த வகையிலும் பாதிக்காது என்று அவர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here