சிறுத்தைகளை அழைத்து வர இந்தியாவில் இருந்து நமீபியா சென்று அடைந்த சிறப்பு விமானம்

இந்தியாவில், வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ‘சீட்டா’ ரக சிறுத்தை இனம் அழிந்து விட்டது. இந்த சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952-ம் ஆண்டு அரசு அறிவித்தது. அதே நேரம் இந்த சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி 8 சீட்டா ரக சிறுத்தைகளை இந்தியாவுக்கு நமீபியா வழங்குகிறது.

5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் அடங்கிய இந்த குழு, விமானம் மூலம் நமீபியாவில் இருந்து வருகிற 17-ந்தேதி காலை ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு சரக்கு விமானத்தில் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நமீபியாவின் வின்ட்ஹாக் நகரிலிருந்து இந்தியத் தூரகம் டுவிட்டரில் பதிவிட்ட செய்தியில் “துணிச்சலான தேசத்தில் இருந்து புலிகளின் தேசத்திற்கு (இந்தியா) நல்லெண்ணத் தூதர்களை அழைத்து செல்ல விமானம் வந்துவிட்டது”எனத் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு விமானத்தின் முன் பகுதியானது புலியின் முக தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூருக்கு வரும் இந்த சிறுத்தைகள் பின்னர் அங்கு இருந்து ஹெலிகாப்டரில் மத்திய பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த 8 சிறுத்தைகளை பிரதமர் மோடி செப்டம்பர் 17-ல் அவரது பிறந்த நாள் அன்று பூங்காவில் விடுவிப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here