கடுமையான பொருளாதார நெருக்கடி: லெபனானில் வங்கிகள் காலவரையின்றி மூடல்

பெய்ரூட், செப்டம்பர் 23:

மேற்காசிய நாடான லெபனான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அந்த நாட்டின் மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் வாங்க முடியாமல் அல்லல் படுகின்றனர். லெபனான் பவுண்ட் மதிப்பு வீழ்ச்சி அடைந்து, பணவீக்கம் உயர்ந்ததையடுத்து 2019-ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் இருந்து டாலர்களை திரும்பப்பெறுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் முடக்கப்பட்ட சேமிப்புகளை மீண்டும் எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வாடிக்கையாளர்கள் வங்கிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவி வந்தது. ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது.

குறிப்பாக ஒரு பெண் போலி துப்பாக்கியுடன் நேற்று முன்தினம் அங்குள்ள வங்கியில் குடும்ப மருத்துவ கட்டணத்தை செலுத்த பணம் கோரியது பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பாதுகாப்பு இல்லாததால் அங்கு வங்கிகளை காலவரையின்றி மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி லெபனான் வங்கிகள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும்வரையில் அங்கு வங்கிகள் மூடப்பட்டு இருக்கும் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அங்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here