அடேங்கப்பா..290 அடியா! உலகின் மிக உயரமான மரத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

பிரேசில் நாட்டில் வடக்குப் பகுதியில் உள்ள இரடாபுரி நதி இயற்கை வன காப்பகத்தில் 290 அடி உயரம் கொண்ட உலகின் மிகப் பெரிய மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தை ஏஞ்சலிம் வெர்மெலோ ‘Angelim Vermelho’ என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். மரத்தின் அறிவியல் பெயர் Dinizia excelsa. இந்த மரம் 88.5 மீட்டர் அதாவது 290 அடி உயரமும், 9.9 மீட்டர் (32 அடி) சுற்றளவும் கொண்டது.

தோராயமாகப் பார்த்தால் 25 மாடி கட்டத்தின் உயரம் இந்த மரத்திற்கு உள்ளது. 2019ஆம் ஆண்டில் 3டி மேப்பிங் திட்டத்திற்காக செயற்கை கோள் புகைப்படம் மூலம் இந்த மரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த மரத்தில் நேரில் சென்றடைய மூன்று ஆண்டுகளாக திட்டமிட்டிருந்த விஞ்ஞானிகள், கடுமையான பிரயாணத்தின் மூலம் இந்த மரத்தை நேரில் கண்டடைந்தனர். 19 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு படகு, நடைப்பயணம், மலையேற்றம் என சாகசமான முறையில் 10 மேற்பட்ட நாள்கள் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.பயணக்குழுவில் வந்த ஒரு நபரை விஷமுள்ள சிலந்தி கடித்ததால் அவரால் பயணத்தை தொடர முடியவில்லை.

இருப்பினும் இத்தனை கஷ்டங்களை தாண்டி மிகுந்த நிறைவை தருவதாக பாரஸ்ட் இன்ஜினியர் டியோகோ அர்மேன்டே சில்வா தெரிவிக்கிறார். இவர் தான் இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளார். இதுவரை மனிதர்கள் காலடி எடுத்து வைக்காத காட்டுப் பகுதியில் நாம் முதல்முறையாக நுழைந்துள்ளோம் என மகிழ்ச்சி திளைப்பில் அவர் கூறுகிறார். இந்த குழு அங்கு முகாமிட்டு மரத்தின் இலைகள், பட்டைகள், மண் ஆகியவற்றின் மாதிரிகளை எடுத்து வைத்துள்ளனர். முதல்கட்ட கணிப்பின் படி இந்த மரம் 400 முதல் 600 ஆண்டுகள் வயது கொண்டிருக்கும் எனக் கூறுகின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here