பகாங் மாநிலத்தை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றும் சைஃபுடின் அப்துல்லா நம்பிக்கை

பி. ராமமூர்த்தி, இண்ட்ரா மக்கோத்தா, நவ. 18-

இரண்டு வாரங்களாகப் பிரச்சாரம் மேற்கொண்டதை அடுத்து பகாங் மாநில அரசாங்கத்தை வழிநடத்த மாநில பெரிக்காத்தான் நேஷனல் தொடர்புக் குழுவுக்கு வாக்காளர்கள் ஆதரவு வழங்குவார்கள் என நம்பிக்கை கொண்டிருப்பதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ சைஃபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

முன்னதாக இண்ட்ரா மக்கோத்தா நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பரிவு – தூய்மை – நிலைத்தன்மை ஆகிய அம்சங்களானது மக்களிடம் இருந்து நேர்மறையான ஆதரவையும் பலத்தையும் வழங்கி பெரிக்காத்தான் நேஷனலை மீண்டும் வலுப்படுத்தும் என நம்பிக்கை உள்ளது.

இதன்மூலம் பகாங் மாநிலத்தை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில் நம்பிக்கைக் கூட்டணி என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதை நிறுத்தவில்லை. மாறாக இத்தாக்குதலை அவர்கள் தங்கள் பிரச்சார அம்சமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

பிரச்சினைக்குரிய என் முன்னாள் அதிகாரியைப் பயன்படுத்தி பிரச்சாரத்தில் களமிறக்கி என்னைத் தாக்கவும் ஒருசில தரப்பு முனைந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் வேண்டுமென்றே என்னைத் தாக்கிப் பேசுகின்றனர். இதுதவிர கெஅடிலான் கட்சித் துணைத்தலைவர் ரஃபிஸி ரம்லியும் இருமுறை இண்ட்ரா மக்கோத்தா பகுதிக்கு வந்து பிரச்சாரத்தில் என்னைத் தாக்கிப் பேசியுள்ளார்.

அப்படி தாக்கிப் பேசுவதில் முனைப்புக்காட்டும் அவர் ஏன் இண்ட்ரா மக்கோத்தா பகுதியில் என்னை எதிர்த்துப் போட்டியிடவில்லை என்ற கேள்வியையும் சைஃபுடின் முன்வைத்தார்.

இதுமட்டுமல்லாது நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் அன்வார் இப்ராஹிமும் இங்கு வந்து என்னைத் தாக்கிப் பேசுகிறார். ஆனால் இதுபோன்ற அச்சுறுத்தல்களைக் கண்டு நான் பயப்படப் போவதில்லை என்றும் சைஃபுடின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here