மக்களவையில் முதல் வாசிப்புக்கு ஒருங்கிணைந்த நிதி மசோதா சமர்ப்பிக்கப்பட்டது

ஒருங்கிணைந்த நிதி (கணக்கிற்கான செலவு) மசோதா 2022 இன் முதல் வாசிப்பு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சராக இருக்கும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் இதனை வழங்கினார் என்று பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு நாட்கள் நடைபெறும் 15ஆவது நாடாளுமன்றத்தின் முதல் தவணையின் இந்த முதல் கூட்டத்தின் போது இந்த சட்டமூலம் இரண்டாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

புதிய வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் வரை அரசாங்கத்தின் சுமூகமான செயற்பாடுகளை உறுதி செய்வதற்காக அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் அது தொடர்பான ஏனைய செயற்பாட்டுச் செலவுகளை வழங்குவதற்கு பிரதானமாக இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிடப்படாத செலவினங்களுக்கான கூடுதல் பட்ஜெட்களை தாக்கல் செய்ய அனுமதிக்கும் வளர்ச்சி நிதிச் சட்டத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அக்டோபர் 7 ஆம் தேதி அப்போதைய நிதியமைச்சர் டெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸால் RM372.3 பில்லியன் ஒதுக்கீட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு (GE15) வழிவகுக்க மூன்று நாட்களுக்குப் பிறகு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் அங்கீகரிக்கப்படவில்லை.

அன்வார் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முழு புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் உள்ள முன்மொழிவுகளை அரசாங்கம் ஆராய்ந்து, தனது அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு முன்னர் தேவையான மாற்றங்களைச் செய்யும் என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here