மக்காவ் மோசடியில் சிக்கி மூன்று பெண்கள் சுமார் 17 இலட்சம் வெள்ளியை இழந்தனர்

ஜார்ஜ் டவுன்:

பினாங்கை சேர்ந்த மூன்று பெண்கள் மக்காவ் மோசடியில் சிக்கி சுமார் 17 இலட்சம் வெள்ளியை இழந்ததாக, பினாங்கு துணை போலீஸ் தலைவர், டத்தோ பிசோல் சல்லே தெரிவித்தார்.

புக்கிட் மெர்தாஜாமில் வசிக்கும் ஒரு கிளார்க்,கடந்த ஜூலை மாதம் முதல் RM1,026,200 மக்காவ் மோசடியில் இழந்ததாக கூறி, டிசம்பர் 19 அன்று போலீஸில் புகாரளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணிடம், தபால் ஊழியர் மற்றும் போலீஸ் அதிகாரி போல் மாறுவேடமிட்டு மோசடிக்கும்பல் அவரைத் தொடர்புகொண்டு பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்.

இரண்டாமவர் RM203,200 இழந்த செபெராங் பிறை செலாத்தானைச் தேர்ந்த 41 வயது ஆசிரியையாவார். அவரும் டிசம்பர் 19 அன்று காவல்துறையில் புகார் அளித்ததாக பிசோல் கூறினார். இவரை மோசடிக்கும்பல் காவல்துறையினரால் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக பணத்தை வைப்பிலிடுமாறு கூற, அவரும் RM190,000 வங்கிக் கடனாகப் பெற்று, அவர்களுக்கு வைப்பிலிட்டார் என்பது மிகவும் பரிதாபத்துக்குரியது.

மற்றயவர் வடக்கு செபெராங் பிறையைச் சேர்ந்த மற்றொரு ஆசிரியை. இவர் மோசடி செய்பவர்களிடம் சிக்கி RM 439,000 இழந்ததை அடுத்து, டிசம்பர் 23ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்தார். இவரும் மோசடிக்கும்பலுக்கு செலுத்துவதற்காக மொத்தம் RM300,000 வங்கிக் கடனையும் எடுத்தார், என்று இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

குறித்த மூன்று வழக்குகளும் மோசடி செய்ததற்காக குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாக ஃபிசோல் கூறினார்.

“ஜனவரி முதல் நேற்று வரை, பினாங்கு காவல்துறை மொத்தம் RM79.5 மில்லியன் இழப்புடன் சம்மந்தப்பட்ட 2,239 சைபர் கிரைம் வழக்குகளை பெற்றுள்ளது, இதில் மக்காவ் ஊழல் வழக்குகளில் அதிகபட்சமாக RM27.14 மில்லியன் இழப்பை ஏற்படுத்திய 921 வழக்குகள்” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here