கோலாலம்பூர்:
சுமூத் கப்பல் படை (Sumud Flotilla) திட்டத்தின் கீழ் இதுவரை காசாவிற்கு 100 கொள்கலன்கள் அளவிலான மனிதாபிமான உதவிப் பொருட்கள் வெற்றிகரமாகச் சென்றடைந்துள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
இதில் ரமலான் மற்றும் ஹரி ராயாவை முன்னிட்டு வழங்கப்பட்ட 40,000 இறைச்சி டப்பாக்களும் அடங்கும். தற்போது 370 டன் எடையுள்ள 30 கொள்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளன.
நிலம் மற்றும் கடல் என இரு வழிகளிலும் இந்த உதவிப் பணிகள் நடைபெறுகின்றன.
கடத்தப்பட்ட 10 மலேசிய ஆர்வலர்களும் விடுவிக்கப்பட்டு, தற்போது இஸ்தான்புல்லில் பாதுகாப்பாக உள்ளனர்.
சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் இந்த உதவிப் படகுகளை வழிமறித்தது சர்வதேச சட்டத்தை (UNCLOS) மீறும் செயல் என்று அமிருடின் ஷாரி சாடினார்.
இது ஒரு மத ரீதியான முயற்சி மட்டுமல்ல, காசா மீதான முற்றுகையை உடைக்க உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்கள் முன்னெடுத்துள்ள ஒரு உலகளாவிய மனிதாபிமானப் போராட்டம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.





















