இந்திய சினிமாவின் மூத்த இயக்குநரும் நடிகருமான கே.விஸ்வநாத் காலமானார்

இந்திய சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான கே.விஸ்வநாத் வயது முதிர்வு காரணமாக தந்து 92வது வயதில் காலமானார்.

கமல்ஹாசன் நடிப்பில் உருவான சலங்கை ஒலி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சியமானார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கலா தபஸ்வி என்று அழைக்கப்படும் இயக்குநர் கே.விஸ்வநாத், 1930ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தவர்.

இவர் கடந்த 1957-ல் சென்னையில் தனது திரையியல் வாழ்க்கையை தொடங்கினார். ஒலிப்பதிவாளராக சினிமாவில் தடம்பதித்த இவர், 1975ல் முதன்முறையாக ஆத்ம கவுரவம் என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கினார். இதற்காக கே.விஸ்வநாத்திற்கு நந்தி விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் இவர் சிரிசிரி முவ்வா, சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உட்பட பல தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களை இயக்கினார். 50 படங்களுக்கு மேல் இயக்கிய விஸ்வநாத், ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார்.

இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தாதாசாகேப் பால்கே விருதை பெற்றுள்ளார். அதேபோல் இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 5 தேசிய விருதுகள், ஆந்திர அரசின் ஏழு நந்திவிருதுகள், 10 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், ஒரு இந்தி பிலிம்பேர் விருது என ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார் என்பது நினைவுகூறத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here