ஹிஜாப் போராட்டத்தில் கைதானவர்களுக்கு மன்னிப்பு – ஈரான் மதத் தலைவர் அறிவிப்பு

ஈரான் நாட்டின் தெஹ்ரான் நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் தேதி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண்ணை ஈரான் அறநெறி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாஷா அமினியை போலீசார் தாக்கியதில் அவர் கோமா நிலைக்கு சென்றார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா செப்டம்பர் 16-ம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து, ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்தப் போராட்டத்தில் 70 சிறார்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20,000 பேர் கைது செய்யப்பட்டதாகவும் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு ஈரான் தூக்குத் தண்டனை அறிவித்தது. ஆனால், இவற்றின் அதிகாரபூர்வ எண்ணிக்கை இதுவரை வெளியாகவில்லை.

மேலும், போராட்டக்காரர்களில் 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள் உட்பட 10,000 பேருக்கு மன்னிப்பு வழங்க இருப்பதாக ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். எனினும் இந்த மன்னிப்பை நிபந்தனைகளுடன் அவர் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 1979 இல் இஸ்லாமிய புரட்சியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த மன்னிப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here