கிள்ளான் பள்ளத்தாக்கில் பானங்களில் போதைப்பொருள் கலந்து விற்பனை செய்த ஐவர் கைது

கடந்த பிப்ரவரி 7 மற்றும் 9 க்கு இடையில், போதைப்பொருள் நடவடிக்கைகளுக்கு எதிராக கிள்ளான் பள்ளத்தாக்கில் தொடர்ச்சியான சோதனைகளில், 12 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த சோதனைகளைத் தொடர்ந்து மூன்று கும்பல்கள் முடக்கப்பட்டதாகவும், போதைப்பொருள் கலந்த பானங்களை விற்பனைக்காக கலப்பதில் நிபுணத்துவம் பெற்ற ஐவர் அந்த கைதில் மாட்டிக்கொண்டதாகவும் கிள்ளான் நகர காவல்துறைத் தலைவர், ஆணையர் டத்தோ அஸ்மி அபு காசிம் தெரிவித்தார்.

பிப்ரவரி 7 அன்று, கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரைச் சுற்றி மேற்கொண்ட நடவடிக்கையின்போது 22 முதல் 39 வயதுடைய ஆறு உள்ளூர்வாசிகள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து 13 இலட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 21 கிலோ கெட்டமைன் மற்றும் இரண்டு கிலோ சியாபுவையும் கைப்பற்றியதாகவும்,” மேலும் RM28,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் ஆடம்பர கடிகாரங்கள், 8 கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் RM4,350 ரொக்கம் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றியதாக, இன்று திங்கள்கிழமை (பிப் 13) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோ அஸ்மி கூறினார்.

பிப்ரவரி 8 ஆம் தேதி மேற்கொண்ட மற்றொரு தொடர் சோதனையில், 24 முதல் 35 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்கள், ஒரு உள்ளூர் பெண் மற்றும் ஒரு தாய்லாந்து பெண் ஆகியோரை கைது செய்ய முடிந்தது என்று அவர் மேலும் கூறினார்.

“ஆரம்ப விசாரணையின் அடிப்படையில், இந்த சந்தேக நபர்கள் போதைப்பொருள் கலந்த பானங்களை கலந்து விற்பனை செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பது தெரியவந்தது என்றும் “போதைப்பொருள் கலந்த பானங்களின் ஒவ்வொரு போத்தலும் குறைந்தபட்சம் RM300 க்கு விற்பது தெரியவந்தது,” என்றும் அவர் கூறினார்.

அத்தோடு அவர்களிடமிருந்து 248 பாட்டில்கள் MDMA (பொதுவாக எக்ஸ்டசி என்று அழைக்கப்படுகிறது), 2.6 கிலோ MDMAபவுடர், 200 எரிமின்-5 மாத்திரைகள், 16 கிராம் கெட்டமைன் மற்றும் 49 செயற்கை காளான் சிகரெட்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டது.

பின்னர் பிப்ரவரி 9 ஆம் தேதி போலீசார் மீண்டும் சோதனை நடத்தியதில், மற்றுமொரு உள்ளூர் நபரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து ஒரு கிலோ கெட்டமைனை கைப்பற்றியதாக ஆணையர் அஸ்மி கூறினார்.

“சோதனையின் போது நாங்கள் ஒரு காரையும் பறிமுதல் செய்தோம், மேலும் குறித்த சந்தேக நபருக்கு மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here