போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் இருவர் கோலாலம்பூரில் கைது

தலைநகரிலுள்ள ஜாலான் மரோஃப் பகுதியில் உள்ள ஒரு வளாகத்திற்கு அருகே, நேற்று முன்தினம் நடந்த சோதனையில், சுமார் 26,000 ரிங்கிட் மதிப்புள்ள 3 கிலோகிராம் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்ததாக, பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அமிஹிசாம் அப்துல் ஷுகோர் தெரிவித்தார்.

மாலை 6.55 மணியளவில், பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் குழு மேற்கொண்ட இந்த சோதனையில், சம்பந்தப்பட்ட வளாகத்தில் RM25,950 மதிப்புடைய 3.3 கிலோ எடையுள்ள கஞ்சா வகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சந்தேகநபர்களிடமிருந்து RM120 ரொக்கமும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது என்று அமிஹிசாம் கூறினார்.

“முதற்கட்ட சிறுநீர் பரிசோதனையின் முடிவில், சந்தேகத்திற்குரிய இருவரும் கஞ்சா போதைப்பொருளுக்கு (THC) சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டது,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குறித்த இரண்டு சந்தேக நபர்களும் நேற்று தொடங்கி பிப்ரவரி 24 வரை ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் என்றும், இந்த வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 15(1)(a) இன் படி விசாரிக்கப்பட்டது என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here