‘இந்தியா தான் எனக்கு எல்லாமே’ – கனேடிய பாஸ்போர்ட்டை துறக்கிறார் அக்ஷய் குமார்

கனேடிய குடியுரிமை குறித்து அடிக்கடி விமர்சனங்களை சந்தித்து வரும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், பாஸ்போர்ட் மாற்றத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்தியா தான் தனக்கு எல்லாமே என்று கூறிய அவர், இந்தியா மீதான தனது அன்பை நிரூபிக்கும் பொருட்டு அதைத் துறப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- “இந்தியாதான் எனக்கு எல்லாமே… நான் சம்பாதித்ததெல்லாம் இங்கிருந்துதான். திரும்பக் கொடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என் பாக்கியம். மக்கள் எதுவும் தெரியாமல் பேசும்போது நீங்கள் வருத்தப்படுவீர்கள்” என்று கூறிய அவர் கனேடிய பாஸ்போர்ட் பெற்றதற்கான காரணத்தை தெரிவித்தார்.

“என் படங்கள் வேலை செய்யவில்லை என்று நினைத்தேன். அப்போது நான் வேலை நிமித்தமாக அங்கு சென்றேன். என் நண்பர் கனடாவில் இருந்தார். அவர் ‘இங்கே வா’ என்றார். விண்ணப்பித்து அங்கே சென்றேன். அந்த சமயத்தில் எனக்கு இரண்டு படங்கள் ரிலீசுக்கு காத்திருந்தன.

இரண்டும் சூப்பர்ஹிட்டானது எனது அதிர்ஷ்டம். அப்போது எனது நண்பர் திரும்பப் போ, மீண்டும் வேலையைத் தொடங்கு என்று கூறினார். எனக்கு இன்னும் சில படங்கள் கிடைத்தன. கனேடிய பாஸ்போர்ட் என்னிடம் இருப்பதை மறந்துவிட்டேன்.

இந்த பாஸ்போர்ட்டை மாற்ற வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் இப்போது எனது பாஸ்போர்ட்டை மாற்ற விண்ணப்பித்துள்ளேன்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here