பெய்ஜிங்: சீனாவில் இருக்கும் ஷாங்காய் நகரில், ஒரு வயதே ஆன குழந்தையின் மூளையில் அதன் பிறக்காத இரட்டையர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிக மிக அரிய நிகழ்வாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது.மருத்துவ உலகில் ஒவ்வொரு நாளும் மாற்றங்கள் தொடர்ந்து நடந்தே வருகிறது. மருத்துவத் துறையில் நாம் அடைந்த வளர்ச்சியின் காரணமாகவே மனிதர்களின் சராசரி வாழ்நாள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதேபோல மருத்துவத் துறையிலும் சில நேரங்களில் வினோதமான சம்பவங்கள் நடைபெற்றன. அப்படியொரு மிக வினோத சம்பவம் தான் இப்போது சீனாவில் நடந்துள்ளது. இதை ஆய்வாளர்களால் நம்பவே முடியவில்லை.
சீனா
சீனாவின் ஷாங்காய் நகரில், ஒரு வயதே ஆன குழந்தையின் மூளையில் அதன் பிறக்காத இரட்டையர் கண்டுபிடிக்கப்பட்டதாக நியூராலஜி ஆய்விதழில் ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. fetus-in-fetu என்ற மிக மிக அரிய நிகழ்வு காரணமாக இது நடக்கிறது. அதாவது இதில் இரட்டைக் கருக்கள் தாயின் வயிற்றில் இணைகின்றன.. ஆனால் அப்படி இணையும் இரு கருக்களில் ஒன்று மட்டுமே வளர தொடங்கும். இதுபோன்ற நேரங்களில்தான் இப்படிப் பிறக்காத குழந்தைக்குள் சிசு காணப்படும்.
குழந்தை
குழந்தையின் தலை வீங்கிய நிலையில் இருந்ததை அடுத்து, பெற்றோர் அக்குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். குழந்தையின் மோட்டார் செயல்பாட்டில் சிக்கல் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மேலும் பல டெஸ்ட்களை எடுத்துள்ளனர். அப்போது தான் அந்த ஒரு வயதுக் குழந்தையின் மூளைக்குள் கரு ஒன்று வளர்வதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதை இன்ட்ராவென்ட்ரிகுலர் fetus-in-fetu என்று குறிப்பிடும் ஆய்வாளர்கள், 1 வயது சிறுமிக்கு இருப்பது அடையாளம் காணப்பட்டதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இரட்டையர்
இதையடுத்து மூளையில் இருந்த கருவின் ஜீனோமை ஆய்வாளர்கள் ஸ்கேன் செய்துள்ளனர். அப்போது தான் உள்ளே இருப்பது இந்த குழந்தையின் இரட்டையர் என்பது தெரிய வந்துள்ளது. பெண் ஒருவர் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் முதல் மூன்று மாதங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பெண் முட்டையும் ஆண் விந்தணுவின் கருத்தரிப்பால் செல்கள் உருவாகும். அப்படி உருவாகும் செல்கள் சரியாகப் பிரிக்கத் தவறும்போது இது நிகழ்கிறது.
ஏன் ஏற்படுகிறது
இதனால் உள்ளேயே ஒரு கரு மற்றொன்றால் சூழப்படும். இப்படி மற்றொன்றால் மூடப்படுவதால், உள்ளே இருக்கும் கருவால் வளர முடிவதில்லை. அதேநேரம் போதுமான அளவு ரத்தம் அதற்கும் செல்வதால் இது தொடர்ந்து உயிருடன் இருக்கும். இதுபோன்ற ஒரு நிகழ்வு தான் இந்த சீன குழந்தைக்கு நடந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த ஒரு வயது குழந்தையின் மூளையில் மற்றொரு கரு இருந்துள்ளது. இது விவகாரத்தில் ஆய்வாளர்கள் அடுத்தகட்ட ஆய்வை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்முறை இல்லை
அதேநேரம் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல்முறை இல்லை. வரலாற்றில் கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. எகிப்து நாட்டில் சிறுவன் ஒருவனின் வயிற்றில் 16 ஆண்டுகளாக இருந்த கரு 1997இல் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்து 21 நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் இருந்து 8 கருக்கள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆய்வாளர்கள்
மிக மிக அரிய நிகழ்வுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதேநேரம் இப்போது இருக்கும் சயின்ஸ் துணையுடன் இந்த விவகாரத்தில் நம்மால் உரியச் சிகிச்சை தர முடியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வரும் காலங்களில் இந்த விவகாரத்தில் கூடுதல் ஆய்வுகளை நடத்தப்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.