க்வீடோ: ஈக்வடார் நாட்டில் ஆக்டோபஸ் கறி சாப்பிட்டதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அழகி மர்ம நபர்களால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் வெளிவந்திருக்கிறது. பரபரப்பான உணவகத்தில் ஆக்டோபஸ் கரியை ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்த மிஸ் இக்குவடார் அழகி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டில் கொலையாளிகள் அவரை நெருங்கி கொலையை அரங்கேற்றியுள்ளனர்.
ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த லண்டி பராக்கா காயுபுரோ 2022 பெற்ற மிஸ் ஈக்வடார் போட்டியில் பங்கேற்றார். அதில் தோல்வியை சந்தித்த பிறகு அந்த போட்டியை பார்க்க வந்த ஈக்வடார் போதை பொருள் கடத்தல் மன்னனான லியாண்டிரோ நாரிரோவுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஈகுவடார் அழகி: இந்த நிலையில் போதை பொருள் கடத்தல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நாரிரோ அங்கு நடந்த கலவரத்தில் பலியானார். இதனையடுத்து போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் வந்த காயபுரோ சில நாட்கள் சிறையில் இருந்தார். பிறகு வெளியே வந்த அவருக்கு தொடர் அச்சுறுத்தல் இருந்ததால் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன் காயபுரோ கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
ஹோட்டலில் சம்பவம்: இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் வெளியாகியுள்ளது. கடந்த 28ஆம் தேதி உணவு விடுதி ஒன்றுக்குச் சென்ற காய்புரோ அங்கு பிரபலமான ஆக்டோபஸ் செவிஸ் என்ற உணவை ஆர்டர் செய்துள்ளார். தொடர்ந்து தனது நண்பருடன் சாப்பிட தயாரான பொழுது தான் எங்கு சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் என்பது குறித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் வெளியிட்டு இருக்கிறார். அந்த போஸ்ட் தான் அவருக்கு வினையாக முடிந்திருக்கிறது.
இன்ஸ்டாகிராம் போஸ்ட்: தலைமறைவாக இருந்த காய்ப்ரோவை தேடி வந்த ஒரு கும்பல் இந்த போஸ்டை பார்த்ததும் குறிப்பிட்ட அந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளது. தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த காய்புரோவை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் மூன்று குண்டுகள் உடலில் பாய்ந்து காயப்ரோ ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இந்த நிலையில் கொலைக்கான காரணத்தை தற்போது காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கடத்தல் மன்னன்: சிறையில் மரணம் அடைந்த போதை பொருள் கடத்தல் மன்னன் நாரிரோவின் மனைவிதான் இந்த படுகொலையை அரங்கேற்றி இருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். நாரிரோ கோடிக்கணக்கில் சம்பாதித்த நிலையில் காய்புரோவின் பழக்கத்திற்கு பிறகு தனது மனைவியை அவர் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஆடம்பர கார்கள், சொகுசு பங்களா உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காய்புரோவுக்கு கொடுத்திருக்கிறார்.
காரணம் என்ன?: இதனால் அவரது மனைவி ஆத்திரத்தில் இருந்திருக்கிறார். இந்த நிலையில் போலீசாரிடம் சிக்கிய போதுகூட காய்புரோவுடன் தனக்கு தொடர்பு இருப்பது பற்றி வெளியே சொல்ல வேண்டாம் என நாரிரோ கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நாரிரோவின் மரணத்திற்குப் பிறகு அவரது மொபைல் போனை பார்த்த போது தான் காய்ப்ரோவுடன் அவருக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது. அழகியுடன் பழகியது தான் தனது கணவரின் மரணத்திற்கு காரணம் என நினைத்த அந்த பெண் கூலிப்படையை ஏவி இந்த கொலையை அரங்கேற்றி இருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.




















