ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றினர். கடந்த 1996-2001- ஆம் ஆண்டு வரையிலான தலீபான்கள் ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடைபெற்றன. இதனால் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை தலீபான்கள் விதிக்கக் கூடும் என ஆப்கன் மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர்.
ஆனால், முந்தைய ஆட்சிமுறையை போன்று தங்களின் தற்போதைய ஆட்சி நிர்வாகம் இருக்காது என தலீபான்கள் உறுதி அளித்தனர். இருப்பினும் அதற்கு நேர்மாறாக தலீபான்களின் நடவடிக்கை அமைந்து வருகிறது. குறிப்பாக தலீபான்கள் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை பாதிக்கும் வகையில் தலீபான்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் மாகாணத்தில் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள திறந்தவெளி உணவகங்கள், தோட்டங்கள் மற்றும் பூங்கா உள்ளிட்ட அமைப்புகளைக் கொண்ட ஓட்டல்கள் ஆகியவற்றிற்கு பெண்கள் மற்றும் குடும்பத்தினர் செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற இடங்களில் ஆண்களும், பெண்களும் சந்தித்துக் கொள்வதாக எழுந்த புகார்களை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




















