இந்தியாவின் கலாச்சாரம் ரொம்ப பிடிச்சிருக்கு.. ஆப்பிள் CEO டிம் குக் புகழாரம்!

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் சொந்த ஸ்டோரை மும்பையில் நாளை திறக்க உள்ளது. மும்பையில் உள்ள ஜியோ வோர்ல்ட் ட்ரைவ் மாலில் இந்த ஆப்பிள் ஸ்டோர் அமைந்துள்ளது. இந்த ஸ்டோருக்கு ஆப்பிள் பிகேசி (Apple BKC) என பெயரிடப்பட்டுள்ளது. அதையடுத்து ஏப்ரல் 20ஆம் தேதி டெல்லியில் ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாவது ஸ்டோரை திறக்க இருக்கிறது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையும் இந்த வாரம் கொண்டாடி வருகிறது. ஸ்டோர்கள் திறப்பு மற்றும் கொண்டாட்டங்களுக்காக ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் இந்தியா வந்துள்ளார்.

இந்நிலையில், தனது இந்தியா பயணம் குறித்து டிம் குக், “இந்தியாவில் அழகான கலாச்சாரமும், அதிக எனர்ஜியும் இருக்கிறது. இந்தியாவில் எங்களது நீண்டகால வரலாறை கட்டமைக்க ஆவலுடன் இருக்கிறோம். உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு தருவது, உள்ளூர் சமூகங்களில் முதலீடு செய்வது, ஒன்றாக பணிபுரிந்து நல்ல எதிர்காலத்தை உருவாக்குவது ஆகியவற்றில் கவனம் செலுத்துவோம்.

உலகம் முழுவதும் இருக்கும் மக்களின் வாழ்வை வளமாக்கி அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் திட்டம் என்று தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்டோர்களை திறப்பது மட்டுமல்லாமல் இந்தியாவில் தனது உற்பத்தியையும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உள்ளிட்ட தயாரிப்புகளை ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், விஸ்ட்ரான் ஆகிய மூன்று நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றன.

இதில் ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் ஆலைகள் சென்னை அருகே அமைந்துள்ளன. ஏற்கெனவே இந்த ஆலைகளில் ஐபோன் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டு விற்பனைக்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல், சென்னையில் தனது இரண்டாவது ஆலையை தொடங்கவும் பெகாட்ரான் திட்டமிட்டு வருகிறது. விஸ்ட்ரான் நிறுவனத்தின் ஆலை பெங்களூரு அருகே அமைந்துள்ளது. இதுபோக இன்னும் கூடுதல் ஆலைகளை இந்தியாவில் அமைக்க ஆப்பிள் திட்டமிட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here