பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பில் போலீஸ் சோதனை; 2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் – மூவர் கைது

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், 2 மில்லியனுக்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

புக்கிட் அமானின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை தலைமையிலான குழு, மே 16 அன்று பண்டார் புக்கிட் பூச்சோங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பல சோதனைகளை நடத்தியதாக, சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட் இன்று திங்கட்கிழமை (மே 22) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

முதல் சந்தேக நபர் அடுக்குமாடிக் குடியிருப்பின் மின்தூக்கி அருகே பிடிபட்டார், அதனைத் தொடர்ந்து, ஏழாவது மாடியில் உள்ள ஒரு பிரிவுக்கு போலீசாரை அவர் அழைத்துச் சென்றார், அங்கு எரிமின் 5 என நம்பப்படும் நூற்றுக்கணக்கான மாத்திரைகள், எக்ஸ்டசி, யாபா மாத்திரைகள் மற்றும் 27 கிலோ எடையுள்ள 26 சியாபு பாக்கெட்டுகளையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

“அந்த சந்தேக நபரின் தொடர் விசாரணை 13வது மாடியில் மற்றொரு பிரிவின் சோதனைக்கு வழிவகுத்தது, அங்கு சந்தேகத்திற்குரிய எட்டு கெட்டமைன் பாக்கெட்டுகள், 71 கிராம் எரிமின் 5 மாத்திரைகள் மற்றும் 18 கிராம் சந்தேகத்திற்குரிய சியாபு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

“பிற்பகல் 2 மணியளவில், அதே அடுக்குமாடி குடியிருப்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றொரு தொடர் சோதனையில், சந்தேகத்திற்குரிய 5 பாக்கெட்டுகளான சியாபு, ஒரு பதப்படுத்தப்பட்ட கஞ்சா பொட்டலம் மற்றும் 82 யாபா மாத்திரைகள் ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்தனர்.

அவர்களிடமிருந்து நான்கு கார்கள், RM5, 550 ரொக்கம் மற்றும் தங்க நெக்லஸ் என்பவற்றையும் போலீசார் கைப்பற்றினர். இந்த நடவடிக்கையில் மொத்தமாக RM2,471,797 மதிப்புள்ள போதைப்பொருட்களும் RM375,550 ஏனைய பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.

அனைத்து சந்தேக நபர்களும் குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களின் முன் பதிவுகளை வைத்திருந்தனர். குறித்த மூவரும் மே 23ம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here