வாஷிங்டன் மீது தாறுமாறாக பறந்த விமானம்

அமெரிக்காவில், டென்னசி மாகாணம் எலிசபெத்டானில் இருந்து செஸ்னா சிட்டேசன் என்ற குட்டி விமானம் புறப்பட்டது. அந்த விமானம், லாங் தீவின் மாக்ஆர்தர் விமான நிலையத்தை நோக்கி சென்றது. ஆனால், வழி தவறியதோ, என்னவோ தெரியவில்லை. திடீரென தலைநகர் வாஷிங்டன் நோக்கி பறந்தது. வாஷிங்டனுக்கு நேர் மேலே தாறுமாறாக பறந்தது. ரேடியோ சாதனம் மூலம் தொடர்பு கொண்டும் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதையடுத்து, விமானத்தை கொண்டு முக்கிய கட்டிடங்களை இடிக்கும் சதித்திட்டமாக இருக்கலாம் என்ற பீதி ஏற்பட்டது. அமெரிக்க ராணுவம், உடனடியாக ஒரு போர் விமானத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டது. போர் விமானத்தை கொண்டு, அந்த விமானத்தை மறித்து வழிக்கு கொண்டு வரலாம் என்பதே அதன் நோக்கம்.

போர் விமானம் கிளம்பும்போது எழுப்பிய சத்தம், வாஷிங்டன் முழுவதும் கேட்டது. ஆனால், தாறுமாறாக பறந்த விமானம், விர்ஜினியா மாகாணம் மான்டேபெலோ அருகே மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. மீட்புப்படையினர் அந்த இடத்தை அடைவதற்கு 4 மணி நேரம் ஆனது.
ஆனால், விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் யாரும் இல்லை. அதில் எத்தனை பேர் பயணம் செய்தனர், ஏன் கீழ்ப்படியாமல் சென்றது என்று தெரியவில்லை. போர் விமானம் கிளம்பியபோது, ஜனாதிபதி ஜோ பைடன் கோல்ப் விளையாடிக்கொண்டிருந்தார். அவருக்கும் சத்தம் கேட்டது. சம்பவம் குறித்து அவருக்கு அதிகாரிகள் விளக்கி கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here