கேமரன் மலையிலிருந்து பேராவின் தாப்பாவிற்கு சென்று கொண்டிருந்த பெண் ஓட்டுநர் ஒருவரை, தாக்கிய நபருக்கு தாப்பா மாவட்ட நீதிமன்றம் இன்று ஏழு நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
குற்றம் சாட்டப்பட்ட முகமட் ஜைம் ஃபைஸ் தர்மிசி, 29, என்பவர் தன் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதையடுத்து, மாவட்ட நீதிமன்ற நீதிபதி சித்தி ஹனும் முகமட் சா குறித்த தண்டனையை வழங்கினார்.
அவர் மீது குற்றவியல் மிரட்டல் பிரிவு 506 மற்றும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323 ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
முகமட் ஃபைஸுக்கு எதிரான ஒவ்வொரு குற்றச்சாட்டின் பேரிலும் விதிக்கப்பட்ட ஏழு நாட்கள் சிறை தண்டனை, இன்று குற்றஞ்சாட்டப்பட்ட நாளிலிருந்து கணக்கிடப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.
முன்னதாக, கடந்த திங்கட்கிழமை சமூக ஊடகங்களில் இது தொடர்பான காணொளி பெரிதும் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.









