உரக்க சத்தம் போடாதே என கண்டித்த தாயை கத்தியால் குத்திக்கொன்ற மகன் -மூவாரில் சம்பவம்

உரக்க சத்தம் போடாதே என தனது மகனை அமைதியாக இருக்கச் சொன்னதற்காக, 73 வயதான பெண் ஒருவர், மூவாரிலுள்ள தாமான் தெமியாங்கில் உள்ள அவர்களது வீட்டில் நேற்று கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

47 வயதான சந்தேக நபர் தனது தாயின் கழுத்திலும் தலையிலும் பலமுறை கத்தியால் குத்தியதாக நம்பப்படுகிறது.

நேற்றிரவு 8.20 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், மனநலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவப் பதிவேடு வைத்திருந்த சந்தேக நபர், தங்கள் குடும்ப வீட்டில் தேவையில்லாமல் சத்தம் போட்டதாக மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முக்லிஸ் அஸ்மான் அஜீஸ் தெரிவித்தார்.

அக்கம்பக்கத்தினரை தொந்தரவு செய்யாமல் இருக்க, அவரது தாயார் குரலைக் குறைக்கச் சொன்னார். இருப்பினும், தாயார் தன்னை கண்டித்தபோது அவர் கோபமடைந்து, சமையலறையில் இருந்து கத்தியை எடுத்துவந்து, தனது தாயின் கழுத்து மற்றும் தலையை குறிவைத்து குத்தினார்.

சம்பவம் தொடர்பில் அவசர அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் அனுப்பப்பட்டதாகவும் முகிலிஸ் கூறினார்.

அவர்கள் வந்தவுடன், சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் சமையலறை கத்தி மற்றும் கோடாரி ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here