சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் யார் பக்கம்?

ஷா ஆலம், ஜூன் 22-
விரைவில் நடைபெறவுள்ள ஆறு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் சிலாங்கூர் மாநிலத் தேர்தல் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
எந்தக் கூட்டணி புதிய அரசை அமைக்கப் போகிறது என்ற கேள்வி வலம் வரத் தொடங்கியுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் மாநிலம் நம்பிக்கைக் கூட்டணி வசம் உள்ளது. அந்தக் கூட்டணியைப் பிரதிநிதித்து இதுவரையில் மூன்று மந்திரி பெசார்கள் சிலாங்கூர் மாநில அரசை வழி நடத்தியுள்ளனர்.
2008ஆம் ஆண்டு முதல் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிம் மந்திரி பெசாராக பதவி வகித்து வந்த நிலையில் சில சர்ச்சைகைள் காரணமாக 2014ஆம் ஆண்டு அவர் பதவி விலகினார்.
அதனையடுத்து டத்தோஸ்ரீ அஸ்மின் அலி சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் பொறுப்பை ஏற்றார். அவர் 2018ஆம் ஆண்டு வரையில் அந்தப் பதவியை வகித்து வந்தார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற 14ஆவது பொதுத்தேர்தலில் அவர் சட்டமன்றம் – நாடாளுமன்றம் என இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.
அவை இரண்டிலும் வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் மந்திரி பெசாராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதே சமயம் துன் டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான மத்திய அரசாங்கத்திலும் அவருக்குப் பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இதன் காரணமாக அஸ்மின் அலி தனது மந்திரி பெசார் பதவியில் இருந்து விலகினார். அவரை அடுத்து சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு மந்திரி பெசார் பதவி வழங்கப்பட்ட நிலையில் அவர் அதனை இன்று வரையில் வகித்து வருகின்றார்.
இந்நிலையில் சிலாங்கூர் சட்டமன்றம் நாளை அதிகாரப்பூர்வமாக கலைக்கப்படவிருக்கும் நிலையில் கூடிய விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 
கடந்த 15ஆவது பொதுத்தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
நாடு தழுவிய அளவில் அந்தக் கூட்டணி மொத்தமாக 74 நாடாளுமன்றத் தொகுதிகளை வென்றெடுத்தது. சிலாங்கூரில் உள்ள 22 தொகுதிகளுள் நம்பிக்கைக் கூட்டணி 16 தொகுதிகளைக் கைப்பற்றிய நிலையில் பெரிக்காத்தான் நேஷனல் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலு சிலாங்கூர், காப்பார் போன்ற தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இந்தச் சுழலில் ஆறு மாநில ங்ட்டமன்றத் தேர்தல்களிலும் பெரிக்காத்தான் நேஷனல் அலை பலமாக வீசும் என அரசியல் விமர்ங்கர்கள் பலரும் கூறி வருகின்றனர். தற்போது நம்பிக்கைக் கூட்டணியின் கோட்டையாகக் கருதப்படும் சிலாங்கூரைக்கூட பெரிக்காத்தான் நேஷனல் வென்றெடுக்கக்கூடும் என்ற ஆரூடங்களும் பரவலாக எழுந்துள்ளன.
சிலாங்கூர் மாநிலத்தில் அஸ்மின் அலிக்கு எப்போதும் தனி மரியாதை இருப்பதாகவும் அதற்கு பெரிக்காத்தான் நேஷனல் அலை பேருதவியாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
ஆனாலும் கடந்த 15ஆவது பொதுத்தேர்தலில் (கோம்பாக் நாடாளுமன்றம்) அஸ்மின் அலியை அமிருடின் ஷாரி 12,729 வாக்குகள் வித்தியாங்த்தில் தோற்கடித்திருந்தார். அதன் மூலம் அஸ்மின் அலியின் ஷெரட்டன் அரசியல் நகர்வு நடவடிக்கைக்கு வாக்காளர்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர் என சிலர் கூறியிருந்தனர்.
இம்முறை சட்டமன்றத் தேர்தலில் அஸ்மின் அலி சிலாங்கூர் மாநிலத்தை வென்றெடுத்து பெரிக்காத்தான் நேஷனலுக்குப் பரிசாக வழங்க வேண்டும் என அதன் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதற்கு மாறாக சிலாங்கூர் மாநிலத்தை நம்பிக்கைக் கூட்டணி கட்டாயம் தக்க வைத்துக்கொள்ளும் என அமிருடின் ஷாரியும் உறுதி கூறியிருந்தார். எனவே சிலாங்கூர் மாநில ங்ட்டமன்றத் தேர்தல் இவ்விருவருக்கும் நடைபெறும் பலப்பரீச்சையாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
நாட்டின் பொருளாதாரப் பலம் பங்களிப்பில் சிலாங்கூர் முதல் இடத்தில் உள்ள மாநிலமாகும். இம்மாநிலத்தில் பல இன வாக்காளர்கள் நிறைந்திருக்கின்றனர். பல தொகுதிகளில் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளது.
குறிப்பாக 30க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை விகிதம் 10 விழுக்காட்டிற்கும் மேல் இருப்பதாக 2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேர்தல் குறித்த ஆய்வு கூறுகிறது.

தற்போது இந்த எண்ணிக்கையானது ஒரு சில இடங்களில் இன்னும் அதிகரித்திருக்கலாம் அல்லது சில இடங்களில் குறைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஆனாலும் இந்த 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியாளரை முடிவு செய்யக்கூடியவர்களாக இந்திய வாக்காளர்களும் உள்ளனர் என்பது மறுக்க முடியாத ஒன்று.
இது ஒரு புறம் இருக்க, கடந்த காலங்களில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் சிலாங்கூர் மாநில இந்தியர்களுக்குப் பல செயல் திட்டங்களை அமல்படுத்தியுள்ளது என ஒரு தரப்பு கூறுகையில், மறு தரப்பு அப்படி ஏதும் செய்யவில்லை எனக் கூறி வருகின்றது.
அதேபோல் தற்போதைய மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிலாங்கூர் வாழ் இந்தியர்களுக்குப் பொருளாதாரம், சுகாதாரம், வாழ்வாதாரம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தியுள்ளார்.
மறுபுறம் சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி ஆலோசனையில் உதித்த செயல் திட்டங்களைத்தான் அமிருடின் அமல்படுத்தி வருகின்றார் என ஒரு தரப்பினர் பேசுகின்றனர்.இதனிடையே கடந்த 5 ஆண்டுகால மாநில ஆட்சி முறையையும் பார்வையிட வேண்டிய அவசியம் உள்ளது. ஷெரட்டன் அரசியல் நகர்வு – அதனால் மாநில அரசுக்கு ஏற்பட்ட விளைவுகள், 2020 ஷா ஆலம் வெள்ளம், கோவிட்-19 பெருந்தொற்று உள்ளிட்ட நிலவரங்களையும் கணக்கில் எடுக்க வேண்டியுள்ளது.
அந்தக் காலகட்டங்களில் சிலாங்கூர் மாநில அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதையும் அதில் இந்தியர்களுக்கான உதவிகள் எந்தளவு சென்றடைந்தன என்பதையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய நேரம் இது.
எது எப்படி இருந்தாலும் சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் யார் பக்கம் என்பதை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.
பெரிக்காத்தான் நேஷனலின் செயல்பாடுகள் இன அடிப்படையில் இருப்பதாகக் கூறப்படுவதால் இந்திய வாக்காளர்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு வழங்குவார்களா அல்லது ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க பரம வைரியான தேசிய முன்னணியுடன் நம்பிக்கைக் கூட்டணி ஒத்துழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி அஸ்மின் அலியின் மீது உள்ள பற்றால் பெரிக்காத்தான் நேஷனல் பக்கம் செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here