ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கிடைக்க வேண்டிய 1,000 உணவுக் கூடைகள் எங்கே?

கோலாலம்பூர் –

கோவிட் – 19 நெருக்கடியான காலகட்டத்தில் ஏழைகளுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் ஒதுக்கப்பட்ட 1,000 உணவுக் கூடைகள் எங்கே போயின என்று சிலாங்கூர் சுங்கை பீலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ நேற்று கேள்வி எழுப்பினார்.

ஏழை மக்களுக்கு போய்ச் சேர வேண்டிய இந்த உணவுக் கூடைகளைப் பதுக்கியது யார் என்பது தொடர்பில் புலன் விசாரணை செய்யக்கோரி புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எஸ்பிஆர்எம்) ரோனி லியூ புகார் செய்தார்.

கோவிட் -19 தொற்றுநோய்க் கிருமி தாக்கத்தினால் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்ச் 18ஆம் தேதி தொடங்கிய இந்த ஆணை மே 12ஆம் தேதிவரை தொடர்கிறது.

இந்தக் காலகட்டத்தில் மக்கள் வருமானத்தை இழந்து தவிக்கிறார்கள். குறிப்பாக பி-40 பிரிவைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் 1,000 உணவுக் கூடைகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த உணவுக் கூடையின் மதிப்பு 100 வெள்ளி என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், 100 வெள்ளி மதிப்புடைய பொருட்கள் அவற்றில் இல்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. சுமார் 35 வெள்ளி மதிப்புள்ள உணவுப் பொருட்களே அதில் இருப்பதாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர் என்று ரோனி லியூ தெரிவித்தார்.

சிப்பாங் நாடாளுமன்றத் தொகுதியில்தான் சுங்கை பீலேக் சட்டமன்றத் தொகுதியும் இடம் பெற்றிருக்கிறது. எங்கள் தொகுதிக்கும் இந்த 1,000 உணவுக் கூடைகள் வந்து சேரவில்லை என்று ரோனி லியூ சொன்னார்.

இந்த 35 வெள்ளி மதிப்புள்ள உணவுக் கூடைகளை அரசு சார்பற்ற இயக்கங்கள் வழங்கியவை என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருக்கிறார்.

உண்மையிலேயே இந்த 35 வெள்ளி மதிப்புள்ள உணவுக் கூடைகளை அரசு சார்பற்ற இயக்கங்கள் வழங்கியிருந்தால் அந்த இயக்கங்களின் பெயர்களை வெளியிட வேண்டியதுதானே என்று ரோலி லியூ கேள்வி எழுப்பினார்.

தங்கள் தொகுதிகளுக்கு வழங்கப்பட்ட உணவுக் கூடைகளின் மதிப்பு வெறும் 35 வெள்ளி மட்டுமே என்று பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்கு இதுவரை சம்பந்தப்பட்ட அமைச்சு பதில் சொல்லாதது ஏன் என்று அவர் கேட்டார்.

ஒவ்வொரு தொகுதிக்கும் வழங்கப்படும் 1,000 உணவுக் கூடைகளை சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் விநியோகிப்பார்கள் என்ற வழிகாட்டி முறை ஏன் கடைப்பிடிக்கப்படவில்லை என்றார் அவர்.

இந்த உணவுக் கூடைகள் உண்மையிலேயே பி-40 பிரிவைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றனவா என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட அமைச்சு விளக்கமளிக்க வேண்டும்.

மேலும், இந்த உணவுக் கூடைகள் எங்கே போயின என்பது தொடர்பில் லஞ்ச ஒழிப்பு ஆணையம் ஒளிவுமறைவின்றி விசாரணை நடத்த வேண்டும் என்று ரோனி லியூ கேட்டுக் கொண்டார்.

நேற்று புத்ராஜெயாவில் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் ரோனி லியூ புகார் செய்தபோது சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹனிபாவின் பிரதிநிதி அஸ்ராப், மலேசிய இந்தியர் குரல் உறுப்பினர் அன்பா பூங்காவனம், ரோனி லியூ செயலாளர் ஹாஜி டாக்டர் ரஹிம் ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here