கிள்ளானில் திருநங்கை சஞ்சனா ராய் மரணம்; கொலையா? தற்கொலையா?

எஸ்.வெங்கடேஷ்

கோலாலம்பூர், ஜூன் 28-

விரைவான விசாரணை வேண்டும் பெற்றோர் போலீஸ் புகார் ஆயூப்கான் தலையிட்டு விசாரிக்க கோரிக்கை.

ஜூன் 8ஆம் தேதி கிள்ளானில் உள்ள ஓர் அடுக்குமாடி குடுயிருப்பில் தூக்குபோட்டுக் கொண்ட நிலையில் இறந்த  சஞ்சனா ராய் (இயற்பெயர் சஞ்சய் – வயது 24) எனும் திருநங்கை மரணம் தொடர்பான விசாரணை துரிதமாகவும் வெளிப்படைதன்மையுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி அவரின் தந்தை காந்தி திங்கட்கிழமை செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்தார்.

சஞ்சனா ராய்  மரணத்திற்கு நீதி கேட்டு அவரின் குடும்பத்தினர், மலேசியத் தமிழர் முன்னேற்றக் கழகத்தினர், சாஸ்தா இயக்கத்தினர் ஒன்றிணைந்து செந்தூல் போலீஸ் தலைமையகத்தில் மெழுகுவத்தி ஏந்தி செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இது குறித்து பேசிய சஞ்சனாவின் தந்தை காந்தி –   தாயார் பிரேமா குமாரி , நாங்கள் ஜோகூர் மாசாயில் வசித்து வருகின்றோம். எங்கள் பிள்ளை திருநங்கையாக மாறிய பின் 7 ஆண்டுகளுக்கு முன்  அங்கிருந்து கோலாலம்பூருக்கு வந்தார். இங்கு அவர் கிள்ளானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்தார்.

அதிலும் அவர் சிகை அலங்கார நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்ததும் எங்களுக்கு அண்மையில்தான் தெரியவந்தது.  ஆனாலும் அவர் அடிக்கடி வீட்டுக்கு வருவார். தொலைபேசியிலும் தினமும் பேசீவார் என அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்நிலையில் ஜூன் 8ஆம் தேதி  தொலைபேசியில் பேசீம்போது அவர் குரலில் மிகுந்த சோகம் தெரிந்தது. தான் மிகுந்த மனக்கவலையில் இருப்பதாகக் கூறினார். அதன்பின் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள பலமுறை முயற்சி செய்தோம். ஆனால் பதில் இல்லை.

இதனையடுத்து 10ஆம் தேதி நேரில் சென்று பார்க்க திட்டமிட்டோம். ஆனால் அன்றைய தினம் நபர் ஒருவர் எங்களைத் தொடர்பு கொண்டு சஞ்சனா தூக்கிலிட்டு இறந்து விட்டதாகக் கூறியதும் தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது. அந்த நபருடன் சஞ்சனா உறவில் இருந்ததும் அவர் அடிக்கடி அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து சென்றதும் எங்களுக்குப் பின்னர்தான் தெரியவந்தது என அவ்விருவரும் மேலும் விவரித்தனர்.

தொடர்ந்து பேசிய சஞ்சனாவின் தந்தை காந்தி, என் பிள்ளையின் மரணத்தில் எங்களுக்கு பெரும் சந்தேகம் உள்ளது. அவர் தூக்கிலிட்டு கிடந்த நிலை பெரும் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. உடல், முகம் கைப் பகுதிகளில் காயத்திற்கான தழும்புகள் உள்ளன. எனவே சஞ்சனாவின் மரணம் கொலையாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கின்றோம்.

மேலும் சஞ்சனா சவப் பரிசோதனை – மரணம் குறித்த தடயவியல் அறிக்கைகள் இன்னும் வராத நிலையில் எங்களுக்கு இந்த சம்பவத்தை விசாரிக்கும் போலீஸ் தரப்பில் இருந்து சரியான பதிலும் கிடைக்கவில்லை. குறிப்பாக சஞ்சனா இறந்து கிடந்த வீட்டிற்கு அந்த நபர் இன்னமும் வந்து செல்வதாகக் கேள்வியுற்றோம். அந்த நபர் மீதும் எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அங்கு இருக்கும் தடயங்கள் ஏதும் அழிக்கப்படாமல் இருக்க இரு நாட்களுக்கு முன்னதாக வீட்டிற்கு பூட்டு போட்டு விட்டேன் என்றார் அவர்.

ஆகையால் என் பிள்ளையின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை உறுதி செய்ய போலீஸ் தரப்பு விசாரணையை துரிதமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மேற்கொள்ள வேண்டும்.  ஒருவேளை இது கொலைதான் என்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

அதிலும் போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயூப் கான் இந்த விசாரணையில் தலையிட்டு எங்களுக்கு நல்லதொரு தீர்வை வழங்க வேண்டும். அவர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்றும் காந்தி கூறினார்.

இதற்கிடையே  இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அந்த வீட்டை போலீஸ் தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். அதோடு அந்த அடுக்குமாடி குடியிருப்புப் பகுதி சி.சி.டி.வி. பதிவு, சஞ்சனா பயன்படுத்திய கைத்தொலைபேசி தரவுகளையும் போலீஸ் விசாரிக்க வேண்டும் மலேசியத் தமிழர் முன்னேற்றக்கழக மகளிர் பிரிவுத் தலைவி ஈஸ்வரி கோரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here