சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் இந்தியர்களே ‘கிங் மேக்கர்கள்?’

கோலாலம்பூர், ஜூன் 29-

சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கி இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்திய வாக்காளர்கள் மீது அதீத கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர். சிலாங்கூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டு விட்ட நிலையில் தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம்.

மலாய்க்காரர்களின் ஓட்டுகளைப் பொறுத்தவரை அம்னோ, பாஸ், பெர்சத்து ஆகிய அரசியல் கட்சிகள் பகிர்ந்து கொள்ளும். அதே சமயத்தில் சீனர்களின் ஓட்டுகள் மொத்தமாக பக்காத்தான் ஹராப்பானுக்குச் சென்று சேரலாம்.

இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை அவர்களின் ஓட்டுகள் தேவைகளின் அடிப்படையில் இடம் மாறலாம். இவர்களின் ஓட்டுதான் வெற்றியாளர்களைத் தீர்மானிக்கப் போகிறது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றிக்கும் இந்தியர்களின் ஓட்டுகள் மிகவும் அவசியமும் அத்தியாவசியமுமாக இருக்கிறது. இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் வேலையின்மை, குற்றச்செயல்களில் இளைஞர்களின் ஈடுபாடு, அரசாங்க வேலைகள் போன்ற விவகாரங்களுக்கு ஒரு தெளிவான தீர்வைச் சொல்ல வேண்டிய இடத்தில் மலாய் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.

மலேசியா நவ் இணைய செய்தித் தளத்திடம் பேசிய அருணாச்சல ஆய்வு ஆலோசனை அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர் ஆர். பன்னீர்செல்வம் இந்திய சமுதாயத்தின் பாரம்பரிய ஓட்டு வங்கி 2008 பொதுத்தேர்தல் வரை பாரிசான் நேஷனல் வசம்தான் இருந்தது. அந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த மஇகாவுக்கு 100 விழுக்காட்டு ஆதரவை இந்திய சமுதாயம் வழங்கி வந்தது. தங்களது உரிமைகளுக்காகப் போராடும் ஒரே கட்சி என்ற ரீதியில் வற்றாத ஆதரவை அக்கட்சிக்கு இந்திய சமுதாயத்தினர் வழங்கினர்.

1998ஆம் ஆண்டு ரிபோர்மாசி இயக்கத்தின் போராட்டம் உச்சத்தைத் தொட்டபோதுகூட இந்தியர்களின் ஓட்டு ஆதரவு பாரிசான் நேஷனல், மஇகா வசமே இருந்தது. அப்போது அம்னோவில் இருந்த அன்வார் துணைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் ரிபோர்மாசி இயக்கம் தலையெடுத்தது.

2008ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மஇகாவும் பாரிசான் நேஷனலும் இந்தியர்களின் ஓட்டுகளை இழக்கத் தொடங்கின. அன்றுமுதல் இன்று வரை இந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கு இரண்டு தரப்புமே கடுமையாகப் போராடி வருகின்றன என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இவர்களின் விசீவாசத்திற்கு மரியாதை இல்லாமல் போனதால் இவர்களின் ஓட்டுகள் அந்தச் சமயத்தில் எதிர்க்கட்சி பக்கம் திரும்பின. அதன் பிறகு அவர்கள் இந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை. இந்தியர்களின் சிந்தனைப் போக்கை மாற்றுவதற்கு மஇகா மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தான் முடிந்தன.

தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள் மட்டுமே இவர்களின் பிரதானப் போராட்டமாக இருந்தது. ஆனால் சாமானிய இந்தியர்கள் தொடர்ந்து வாழ வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் மஇகா கவனம் செலுத்தாததால் இன்றளவும் இந்திய சமுதாயத்தின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியவில்லை.

அண்மையில் ஷா ஆலமில் பெரிக்காத்தான் நேஷனல் நடத்திய மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் இந்தியர்கள் பெருமளவில் பங்கேற்றது அரசியல் நீரோட்டத்தில் ஒரு புதிய கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சிலாங்கூர் மாநில சட்டப் பேரவையில் மொத்தம் 56 இடங்கள் உள்ளன. இதில் 3 தொகுதிகளில் மட்டுமே இந்தியப் பிரதிநிதிகள் வசம் உள்ளன. இது மாநிலத்தில் உள்ள இந்தியர்களின் மொத்தத் தொகையை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை. சிலாங்கூர் மாநிலத்தைப் பொறுத்தவரை இந்திய வாக்காளர்கள் 3 விழுக்காட்டில் இருந்து 43 விழுக்காடு வரை உள்ளனர்.

மலேசியாவில் மொத்த இந்திய ஜனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் சிலாங்கூரில் வாழ்கின்றனர். புக்கிட் மெலாவத்தி, ஈஜோக், பண்டமாரான், சீங்கை கண்டிஸ் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

அதேபோன்று கோலகுபுபாரு, புக்கிட் அந்தாரா பங்சா, காஜாங், செந்தோசா, கோத்தா கெமுனிங் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இந்திய வாக்காளர்களின் வாக்கே வெற்றியைத் தீர்மானிக்கும்  துருப்புச் சீட்டுகளாக இருக்கின்றன.

கலைக்கப்பட்ட சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் ஆர். ரஜீவ் (புக்கிட் காசிங்), குணராஜ் ஜோர்ஜ் (செந்தோசா), வீ. கணபதிராவ் (கோத்தா கெமுனிங்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

பொதுவில் இந்திய சமுதாயம் பக்காத்தான் ஹராப்பான் பக்கமே இருப்பதால் வரும் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல் கூட்டணிகளுக்கு இந்த ஆதரவு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here