சிறுநீர் கழித்த அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரின் காலை கழுவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

போபால், ஜூலை 7-

மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளியான தேஷ்பத் ரவத் மீது ஒரு நபர் சிறுநீர் கழித்தார். 

புகைபிடித்தவாறு அந்த தொழிலாளி மீது தேஷ்பத் ரவத் சிறுநீர் கழிக்கும் கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பழங்குடியின தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த நபர் அதேபகுதியைச் சேர்ந்த பர்வேஷ் சுக்லா என்பதை கண்டுபிடித்தனர். மேலும், அவர் பாஜகவை சேர்ந்தவர் என்பதும் அவருக்கு பாஜக எம்.எல்.ஏ. கேதார்நாத் சுக்லா, பிற பாஜக நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து தொழிலாளி மீது சிறு நீர் கழித்த பாஜக நிர்வாகி பர்வேஷ் சுக்லாவை போலீசார் நேற்று கைது செய்தனர். பர்வேஷ் சுக்லா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரின் வீட்டின் ஒரு பகுதியை அதிகாரிகள் நேற்று புல்டோசர் கொண்டு இடித்தனர்.

 இந்தநிலையில், மத்திய பிரதேசத்தில் முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரை போபாலில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்து பேசிய முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவரின் காலை கழுவினார். பின்னர் அவருக்கு மாலை சூட்டி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இது குறித்து பழங்குடி இளைஞரிடம் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:- 

அந்த வீடியோவைப் பார்த்து நான் வேதனைப்பட்டேன். நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். மக்கள் எனக்கு கடவுள் போன்றவர்கள் என்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here