தும்போக் தோட்டக் குடியிருப்பாளர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர், வீதிக்கு வந்தனர் தொழிலாளர்கள்

எம்.எஸ்.மணியம்

சிப்பாங், ஜூலை 12-

சிப்பாங் தஞ்சோங் சிப்பாட் அருகே அமைந்துள்ள முன்னாள் தும்போக் தோட்டக் குடியிருப்பாளர்கள் தங்களது  வீடுகளைக் காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து நேற்று அதிகாரிகளால் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனையடுத்து எங்கே போவது என்று  தெரியாமல் அதன் குடியிருப்பாளர்கள் தோட்டத்தின் முன்புறம் சாலையோரம் அமைக்கப்பட்ட தற்காலிகக் கூடாரத்தில் தஞ்சமடைந்தனர்.

நீதிமன்ற ஆணையுடன் நேற்று இவ்விடத்திற்கு வந்த அதிகாரிகள் தோட்டக் குடியிருப்பாளர்களிடம் விளக்கமளித்த பின்னர் வீடுகளிலிருந்து பொருட்களை வெளியேற்றத் தொடங்கினர். அப்போது குடியிருப்பாளர்களில் சிலர் கதறி அழுதனர்.

அப்போது குடியிருப்பாளர்களுக்கும் நீதிமன்ற அதிகாரிகளுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் நீதிமன்ற ஆணையை மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அடுத்து வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் வெளியேற்றப்பட்டன.

வீடுகளிலிருந்து சமையல்கூட பொருட்கள், கட்டில், மெத்தை, மேஜை, நாற்காலிகள் உட்பட பூஜை  அறையிலிருந்து சாமி படங்களும் வீட்டுக்கு வெளியே கொண்டு வரப்பட்டன.

வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தங்குவதற்கு வீடுகள் இல்லாததால் தோட்ட நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கூடாரத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.  

இது குறித்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் சார்பில் விளக்கமளித்த மு.விஷ்ணு முன்பு இந்த தோட்டத்தை நிர்வகித்து வந்த மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனம் அதைக் கடந்த 5.9.2005இல் மற்றொரு தனியார் நிறுவனத்திடம் விற்று விட்டது. இதன் பிறகு மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனமும் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் கடந்த 31.3.2006இல் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அதில் 1999 மாநில அரசின் சட்டப்படி ஒரு தோட்டம் விற்கப்படும்போது அங்கு வசித்த தொழிலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டம் கண்டிப்பாக உருவாக்கப்பட வேண்டும் என்பதோடு மற்ற அனுகூலங்களும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணங்களும் இழப்பீடுகளும் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் இழப்பீடு பெற்றுக் கொண்டு தோட்டத்தை விட்டு வெளியேறிய நிலையில் மற்றொரு பிரிவினர் ஏற்கெனவே தோட்ட குமாஸ்தாக்கள் குடியிருந்த வீடுகளுக்கு இடம் பெயர்ந்ததோடு அவ்வீடுகளைப் புதுபிக்க 25 ஆயிரம் ரிங்கிட் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இழப்பீடுகள் பெற்றுக் கொண்டு வெளியேறியவர்களைத் தவிர மற்ற 12 பேர் தோட்டத்திலேயே வீடுகளைப் பெற்றுக்கொண்ட வேளையில் மேலும் 11 பேர் நிலங்களைப் பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் வீடுகள், நிலங்கள் அடங்கிய பகுதியை மற்றொரு நிறுவனம் வாங்கியதோடு தன்னுடைய நிலத்தில் நான்கு வீடுகள் இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து நீதிமன்றம் வீடுகளைக் காலி செய்ய உத்தரவிட்டுள்ளதை அடுத்து நேற்று நாங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டோம் என்று தெரிவித்தார்.

அனைத்து விதிமுறைகளும் முறையாகக் கடைபிடிக்கப்பட்டிருந்தாலும் தங்களின் வீடுகளைக் காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டடு நேற்று வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதால் அடுத்து  என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவிக்கிறோம் என்று அவர் கூறினார்.

ஒரு தோட்டம் விற்கப்படும்போது தொழிலாளர்களுக்கு வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என்று கடந்த 2.6.1999இல் மாநில அரசாங்கத்தின் பதிவேட்டில் (கெஸட்டில்) இடம் பெற்றுள்ளதாகவும் இந்த விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி இருந்தால் தங்களுக்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது என்றும் குறிப்பிட்ட விஷ்ணு வீடுகள் உடைக்கப்படும் விவகாரத்தில் தாங்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதனிடையே இவ்விவகாரம் குறித்து தகவல் அறிந்து இங்கு வருகை புரிந்த கோலலங்காட் நகராண்மைக்கழக உறுப்பினர் இரா.ஹரிதாஸ் இச்சம்பவம் தொடர்பாக நேற்று காலை மாநில மந்திரி பெசாரிடம் தெரியப்படுத்தியதாகவும் 

 

இதனைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு தற்காலிகமாக அதாவது சுமார் மூன்று மாதங்களுக்கு வாடகை வீடு ஏற்பாடு செய்யப்பட்டு தங்க வைக்கப்படுவார்கள் என்றும் இதன் பிறகு சிலாங்கூர் மாநில வீடமைப்புத் திட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் எனினும் இது குடியிருப்பாளர்களின் தேர்வைப் பொறுத்தது என்றும் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here