கோலாலம்பூர், ஜூலை 20-
மஇகாவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெரும்பாலானோர் அக்கட்சியில் இருந்து வெளியேறி பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக சிலாங்கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் தரப்பு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சிலாங்கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனலின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று இது குறித்து கருத்துப் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதற்கு இந்தியர்களின் நலனுக்கு பெரிக்காத்தான் நேஷனல் போராடுகிறது எனத் தலைப்பிடப்பட்டிருந்தது.
அந்தக் கருத்துப் பதிவேற்றத்தில் மலேசியாவிலுள்ள இந்தியர்களுள் 44 விழுக்காட்டினர் சிலாங்கூரில் வசிக்கின்றனர். அவர்கள் சிலாங்கூர் மாநில மக்களின் மொத்த எண்ணிக்கையில் 10.5 விழுக்காடாக உள்ளனர். எனவே இந்தியர்கள் தங்களின் கோரிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் மேலிடத்திற்குத் தெரியப்படுத்தும் முக்கிய மாநிலமாக சிலாங்கூர் உள்ளது.
முன்னதாக மஇகா இந்தியர்களின் உரிமையை நிலைநாட்டும் பொறுப்புடைமையைக் கொண்ட கட்சியாக விளங்கியபோது இந்தியர்கள் தேசிய முன்னணியின் வாக்கு வங்கிகளாக இருந்தனர். ஆனால் 2008ஆம் ஆண்டு சிலாங்கூரில் தேசிய முன்னணி கவிழ்ந்ததும் மஇகா இந்தியர்களின் வாக்குகளை இழக்க நேரிட்டது.
மேலும் இந்தியர்களின் மனத்தை மீண்டும் வென்றெடுக்க அக்கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. அச்சமயத்தில் இந்திய வாக்காளர்களின் விசுவாசம் தவறுதலாகப் பயன்படுத்தப்பட்டதால் அவர்களின் ஆதரவு வேறு திசைக்கு மாறியது.
தற்போது மஇகா உறுப்பினர்கள் பெரும்பாலானோர் குறிப்பாக சிலாங்கூரில் உள்ளவர்கள் அக்கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கவில்லை. கட்சியில் இருந்து வெளியேறவும் முடிவு எடுக்கின்றனர்.
அதன்பின்னர் இந்தியர்களின் நலன் காக்க அவர்கள் பெரிக்காத்தான் நேஷனலுடன் இணைந்து பயணிக்க முனைகின்றனர் என்று அந்தக் கருத்துப் பதிவேற்றத்தில் தகவல் பகிரப்பட்டுள்ளது.
அதேசமயம் நம்பிக்கைக் கூட்டணி, நடவடிக்கைகளைக் காட்டிலும் அதிகளவில் வெறும் வாக்குறுதிகளை மட்டுமே தருவதால், அக்கூட்டணி இந்தியர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கு ஏற்புடைய தரப்பு அல்ல என தற்போது கருதப்படுகின்றது.
இந்தச் சுழலில் சிலாங்கூரை மீண்டும் ஆட்சிபுரிய பெரிக்காத்தான் நேஷனலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் இந்திய சமூகத்தின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சியில் அக்கறை செலுத்தப்படும்.
குறிப்பாக டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியபோது 2022ஆம் ஆண்டில் அப்பகுதி வாழ் இந்திய மக்களுக்கு ஏறத்தாழ ஒரு மில்லியன் ரிங்கிட் வரையில் செலவிடப்பட்டதாகவும் சிலாங்கூர் மாநில பெரிக்காத்தான் அந்தக் கருத்துப் பதிவேற்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே மஇகாவில் இருந்து உறுப்பினர்கள் பலரும் வெளியேறுவதாக பெரிக்காத்தான் நேஷனல் தரப்பு கூறியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் அக்கட்சியின் முன்னாள் உதவித்தலைவர் டத்தோ சிவராஜ் வெளியேறினார். அவரை அடுத்து சிலாங்கூர் மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் பி.புனிதனும் கட்சியில் இருந்து வெளியேறினார்.
அண்மையில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இந்தியர்களுக்கான புதிய கட்சியை உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்கு மஇகாவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் தலைமையேற்பார்கள் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிலாங்கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனலின் கூற்று அந்த ஆரூடத்தை மேலும் பலப்படுத்துகிறது.
























