இராமசாமிக்கு வாய்ப்பில்லை? அடுத்த 2ஆவது துணை முதலமைச்சர் யார்?

பி.ஆர். ராஜன்

ஜார்ஜ்டவுன், ஜூலை 25-

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இடம்பெற்றுள்ள உறுப்புக் கட்சிகள் அவர்களின் வேட்பாளர்களை அறிவித்துவரும் நிலையில் ஜசெக பினாங்கு மாநில வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட வேண்டிய வேட்பாளர் பட்டியல் இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படவிருக்கிறது. வரும் ஆகஸ்டு 12ஆம் தேதி நடைபெறும் பினாங்கு மாநிலத்தின் 15ஆவது சட்டமன்றத் தேர்தலில் 19 தொகுதிகளில் ஜசெக போட்டியிடுகிறது என்று அதன் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் அறிவித்திருக்கிறார்.

இம்முறை சில புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் வகையில் ஏற்கெனவே 3 தவணைகள் சேவையாற்றிவிட்ட ஐவரின் பெயர்கள் இப்பட்டியலில் இருந்து விடுபட்டிருக்கிறது என நம்பப்படுகிறது.

இந்தப் பட்டியல் நேற்று முன்தினம் கடைசி நிமிட ஆலோசனைகள், மேல் முறையீடுகளுக்குப் பிறகு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பிறை சட்டமன்றத் தொகுதியில் கடந்த 3 தவணைகளாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று மாநில துணை முதலமைச்சராகப் பதவி வகித்த பேராசிரியர் ப. இராமசாமிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

அவருக்குப் பதிலாக எக்கோ வோர்ல்டு டெவெலப்மென்ட் குரூப் பெர்ஹாட் முன்னாள் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ எஸ். ராஜு களமிறக்கப்பட்டு வெற்றிபெறும் பட்சத்தில் ஆட்சிக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜசெகவின் வாதங்களின் அடிப்படையில் வைத்துப் பார்த்தால் ஏற்கெனவே 3 தவணைகள் தேர்தலில் நின்று வெற்றிபெற்ற டத்தோ கிராமாட் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஜசெக உதவித் தலைவருமான ஜக்டிப் சிங் டியோவுக்கும் இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்க வேண்டும்.

பேராசிரியர் இராமசாமிக்கு அடுத்து கட்சியில் ஒரு சட்டமன்ற உறுப்பினராக நீண்ட காலமாக ஜக்டிப் சிங் சேவையாற்றி வருகிறார். அதேசமயத்தில் சுங்கை பூயு சட்டமன்ற உறுப்பினர் பி ஃபூன் போ, பாடாங் லாலாங் சட்டமன்ற உறுப்பினர் சோங் எங், பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினர் இயோ சுன் ஹின், பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சுன் லிப் சீ ஆகியோருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.

பேராசிரியர் இராமசாமிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த 2ஆவது துணை அமைச்சர் பதவியில் யார் நியமனம் செய்யப்படுவார் என்பது இப்போது கேள்விக்குறியாக உருவெடுத்திருக்கிறது.

2ஆவது துணை முதலமைச்சர் பதவி மாநிலத்திலுள்ள இந்தியர்களின் நலன்களுக்கான ஒரு பாரம்பரியப் பதவியாக விளங்கிவருகிறது. தற்போது 2ஆவது துணை முதலமைச்சராக இருக்கும் பேராசிரியர் இராமசாமி, பினாங்கு இந்து அறவாரியத்தின் தலைவராகவும் இருக்கிறார். மாநிலத்திலுள்ள ஆலயங்களின் நலன்களையும் சமய விவகாரங்களையும் அவர் கவனித்து வருகிறார்.

பிறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்குப் பேராசிரியர் இராமசாமிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் ஆகஸ்டு 12ஆம் தேதி முடிவுகள் வேறுமாதிரியாக இருக்கும் என்று ஏற்கெனவே அத்தொகுதியில் செயல்படும் 40க்கும் அதிகமான அரசு சாரா இயக்கங்கள், வணிகச் சங்கங்கள் பகிரங்கமாக அறிவித்திருக்கின்றன.

அதேபோன்று தொகுதி அம்னோவும் பேராசிரியர் இராமசாமிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here