வி.ஜி. சந்தோஷத்திற்கு பெருந்தமிழன் விருது

வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 30ஆம் ஆண்டு விழா தமிழ் இலக்கியப் பெருவிழாவாக அடையாறு டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை, அறிவியல் கலையரங்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.  சிறுபான்மை, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. மஸ்தான், வி.ஐ.டி. வேந்தர் விஸ்வநாதன், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் வள்ளிநாயகம், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை அருள், விஜிபி ராஜா தாஸ், விஜிபி ரவி தாஸ், பேராசிரியை உலகநாயகி, பெருங்கவிகோ வா.மு.சேதுராமன், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், இயக்குநர் முத்துராமன், எம்.கே.டி. பாலன், டில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முகுந்தன், கவிஞர் ரவிபாரதி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் உலகைத் தமிழால் உயர்த்துவோம் என்ற கொள்கை வழியில் நடைபயில கலைமாமணி பெருந்தமிழன் டாக்டர் வி.ஜி. சந்தோஷம் நிறுவனத் தலைவராக இருந்து தமிழ்ச் சான்றோர் பெருமக்களான தவத்திரு குன்றக்குடி அடிகளார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன், திருக்குறள் முனுசாமி ஆகியோரின் முன்னிலையில் 1993ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்று மறுமலர்ச்சி திமுக துணைப் பொதுச் செயலாளர், மல்லை தமிழ்ச் சங்கத் தலைவர் மல்லை சி.ஏ.சத்தியா கூறினார்.

30 ஆண்டுகளாக இடையறாத தொடர் நிகழ்வுகள் மூலமாக உலகத் தமிழர்களின் நம்பிக்கையைப் பெற்று இச்சங்கம் நாளும் வளர்ந்துவருகிறது. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி கன்னியாகுமரியில் 130 அடி உயர திருவள்ளுவர் சிலையை நிறுவி உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். அதேசமயம் பெருந்தமிழன் டாக்டர் வி.ஜி. சந்தோஷம் உலகம் முழுவதும் இதுவரை 155 திருவள்ளுவர் சிலைகளை நிறுவி உலகத்தின் கவனத்தை ஈர்த்துவருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவரின் அருந்தொண்டைப் பாராட்டி 2022ஆம் ஆண்டு மல்லை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பெருந்தமிழன் விருது வழங்க கவிப்பேரரசு வைரமுத்துவுடன் குதிரைகள் பூட்டிய ஷாரட் வண்டியில் அமரவைத்து பல்லவர்களின் தேர் ஓடிய ராஜா வீதியில் ஊர்வலமாக அழைத்துவந்து மரகதப் பூங்கா திடலில் யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும் யானே தவம் உடையேன் எம் பெருமான் யானே இருந்தமிழ் நல்மாலை இணை அடிக்கே சொன்னேன் பெருந்தமிழன் நல்லேன் பெருகு என்ற பெருந்தமிழன் பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதி பாசுரத்தைப் பாடி பெருந்தமிழன் விருதை வழங்கி மகிழ்ந்தோம்.

டாக்டர் வி.ஜி.சந்தோஷத்திற்கு உலகம் முழுவதும் வழங்கப்பட்டுள்ள விருதுகள் எண்ணிலடங்கா. அதற்காகவே அவருக்கு உலக சாதனை கின்னஸ் விருது வழங்கலாம் என்று மல்லை சத்தியா தெரிவித்தார். மேலும் தலைமுறை கோடிகண்ட தமிழின உணர்வைப் பட்டுப்போகாமல் பாதுகாப்போம் என அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here