கடினமான காலங்களை கடந்து வந்த ஜெயப்பிரதா

இந்திய சினிமாவில் 70 மற்றும் 80களில் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தவர் நடிகை ஜெயப்பிரதா. நடிகை ஜெயப்பிரதா அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திரா உட்பட கிட்டத்தட்ட அனைத்து சூப்பர் ஸ்டார்களுடனும் பணிபுரிந்துள்ளார். பாலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாக்களிலும் நடித்து உள்ளார். ஜெயப்பிரதா தனது 13 வயதில் நடிக்க தொடங்கினார். முதல் படத்துக்கு 10 ரூபாய் தான் சம்பளம் வாங்கினார்.

பூமி கோஷம் தெலுங்கு சினிமா மூலம் திரை உலகில் அறிமுகமான ஜெயப்பிரதா, பின்னர் பாலிவுட்டிலும் நுழைந்தார். அவரது நடிப்பு மற்றும் நடன திறமையால் அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஆனார். ஜெயப்பிரதா தனது வாழ்க்கையில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா மற்றும் ஜீதேந்திரா போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.  ஜீதேந்திராவுடன் அவர் ஜோடி சேர்ந்தால் அந்த படம் சூப்பர்ஹிட் என்று கருதப்பட்டது. இருவரும் இணைந்து பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தனர்.

தனது அற்புதமான நடிப்பிற்காக பல விருதுகளை வென்றுள்ளார். 1976 ஆம் ஆண்டில் மிகப்பெரிய உச்ச நட்சத்திரமானார். “வந்தாரை வாழ வைக்கும் மாநிலம் இது” டைரக்டர் கே.பாலச்சந்தர் இயக்கிய அந்துலேணி கதா என்ற திரைப்படம் இவரது நடிப்புத் திறமையை வெளிக்காட்டியது. அதற்குப் பிறகு இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கியது. தமிழ் மொழியில் நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, ஏழை ஜாதி, தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

30 ஆண்டுகளில் 300 திரைப்படங்கள் நடித்துள்ளார். ஜெயப்பிரதாவின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகள் நிறைந்தது. ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நஹ்தாவை 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அப்போது ஜெயப்பிரதாவின் திருமணம் பெருமளவு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜெயப்பிரதாவை மணந்த பிறகும் முதல் மனைவியை ஸ்ரீகாந்த் நஹ்தா விவாகரத்து செய்யவில்லை . திருமணத்திற்குப் பிறகும் ஜெயப்பிரதா தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வந்தார். ஆனால் தயாரிப்பாளர்கள் திருமணத்திற்குப் பிறகு அவரை ஓரங்கட்டத் தொடங்கினர்.

இன்னொரு பக்கம் முதல் மனைவியை ஸ்ரீகாந்த் விவாகரத்து செய்யாததால் திருமணம் ஆன பிறகும் ஜெயப்பிரதாவுக்கு மனைவி அந்தஸ்து கிடைக்கவில்லை. இதனால் தனிமையில் வாழ்க்கையை கழிக்க வேண்டியதாயிற்று. என்.டி ராமாராவின் தெலுங்கு தேசக் கட்சியில் 1994 ஆம் ஆண்டு ஜெயப்பிரதா தன்னை இணைத்துக் கொண்டார்.

பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி சந்திரபாபு நாயுடு பிரிவில் சேர்ந்தார். சந்திரபாபு நாயுடுவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகினார். அதன் பின்னர் சமாஜ்வாதி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடந்த பொதுத் தேர்தலின் போது ராம்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த 2014ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி தலைவர்களுக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஜெயப்பிரதா சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியில் சேர்ந்தார். ஆனால் அங்கும் ஜெயப்பிரதா நீடிக்கவில்லை திடீரென அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார். தற்போது வெப் சீரிஸ் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளில் பிசியாக உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here