பூலாய் நாடாளுமன்றத் தொகுதி, சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதிகளில் தேசிய முன்னணி போட்டியிடாது

கோலாலம்பூர், ஆகஸ்டு 3 :

பூலாய் நாடாளுமன்றத் தொகுதி, சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதிகளின் நடைபெறவுள்ள இடைத் தேர்தல்களில் தேசிய முன்னணி போட்டியிடப்போவதில்லை என்று அக்கூட்டணியின் தலைவர் டாக்டர் அஹமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை அரசாங்கம் எப்போதும் வலியுறுத்தும் ஒற்றுமையை நிலைநாட்டும் விதமாக, தாம் அத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

ஜோகூர் மாநிலத்தின் அந்த இரண்டு தொகுதிகளும் அமானா கட்சியின் இடங்கள் என்பதை தான் அறிவதாக துணைப் பிரதமருமான ஸாஹிட் கூறினார்.

“அத்தகைய நிலையில் ஒற்றுமை உணர்வைப் பிரதிபலிக்கும் விதத்தில் அந்த இரண்டு தொகுதிகளிலும் அமானா உறுப்பினர்கள் போட்டியிடுவதை நாங்கள் ஆதரிக்கிறோம்,” என்று வியாழக்கிழமை அவர் கலந்துகொண்ட பெண்களுக்கான வேலை ஊக்குவிப்பு சார்ந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செப்டம்பர் 9ஆம் தேதி அந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) தெரிவித்தது.

ஆகஸ்ட் 26ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யும் தினம் என்றும் செப்டம்பர் 5ஆம் தேதி முதற்கட்ட வாக்களிப்பு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணைய தலைவர் அப்துல் கனி சாலெ தெரிவித்தார்.

அந்த இரு தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவந்த அமானாவின் துணைத் தலைவர் சலாஹுதீன் அயுப், ஜூலை 23ஆம் தேதி மரணமடைந்ததையடுத்து அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவின அமைச்சராக இருந்த 61 வயது சலாஹுதீன், மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக மரணமடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here