ஈப்போவில் பிறந்து விண்வெளிக் கனவை நனவாக்கும் வான்மிதா

ஈப்போ நகரில் பிறந்த வான்மிதா ஆதிமூலம் விண்வெளி வீராங்கனை ஆகவேண்டும் என கனவைச் சுமந்து வளர்ந்தார்.

வாழ்க்கைத்தொழில் விண்வெளிப் பயிற்சியாளராக இவ்வாண்டு தெரிவுசெய்யப்பட்ட நிலையில் குமாரி வான்மிதாவின் அந்தக் கனவு இப்போது நனவாகும் நிலையை எட்டியுள்ளது.

கிள்ளானில் தொழிற்சாலை ஊழியர்களான பெற்றோருடனும் இரண்டு அண்ணன்மார்களுடனும் வளர்ந்த வான்மிதா, தமிழ்ப்பள்ளியில் தொடக்கநிலைக் கல்வியைப் பயின்றவர்.

‘ஸாத்துரா: த ஸ்பேஸ் எக்ஸ்புளோரர்’ படத்தை பத்து வயதில் பார்த்தபோது முதன்முதலில் விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

பதின்மூன்று வயதில் இதுபற்றி புதிய வகுப்பு மாணவர்கள் முன்னிலையில் பகிர்ந்தபோது பலர் கேலி செய்தனர்.

“மெலிந்த உருவம் கொண்ட என்னை காற்றுக்கூட அடித்துச்சென்றுவிடும் எனச் சிலர் கூறினர். வேறு சிலரோ, இத்தகைய கனவுகளுக்கு மலேசியா வாய்ப்பு வழங்காது என்று சொல்லி என்னை வேறொரு இலக்கை நோக்கும்படி கூறுவர்,” என்று இவர் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

தட்டிக்கொடுக்க வேண்டிய பெரியவர்களே பலர் தம் கனவுகளை கேலியாகப் பேசும்போது தொடக்கத்தில் கவலைப்பட்டார் வான்மிதா.

ஆயினும், போதும் என்ற ஒரு நிலையை எட்டிய பிறகு இனி எந்த ஒரு குறைகூறலுக்கும் செவிசாய்க்கப்போவதில்லை என முடிவெடுத்தார். இலக்கை எப்படியேனும் அடையவேண்டும் என உறுதிபூண்டு, அது தொடர்பான ஆய்வுகளை இவர் மேற்கொண்டார்.

மலேசியாவின் முதல் விண்வெளி வீரரான ஷேக் முஸாஃபர் ஷுகோரை உயர்நிலைப் பள்ளியில் சந்திக்கக் கிட்டிய வாய்ப்பு, குமாரி வான்மிதாவுக்கு ஊக்கமளித்தது.

“விண்வெளி வீரர் ஒருவரை முதன்முதலாக சந்தித்த அனுபவம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது,” என்றார் இவர்.

விண்வெளி வீரர் ஆவதற்கு நல்ல மதிப்பெண்களின் முக்கியத்துவத்தை குமாரி வான்மிதா நன்கு உணர்ந்தார். பிடி3 எனப்படும் உயர்நிலை மூன்றுக்கான இறுதித் தேர்வில் அதிகபட்சமாக ஒன்பது ‘ஏ’ மதிப்பெண்களையும் எஸ்பிஎம் எனப்படும் மலேசியாவின் உயர்நிலைப் படிப்புக்கான இறுதித் தேர்வில் பத்து ‘ஏ’ மதிப்பெண்களையும் பெற்றார்.

எந்தக் குறைகூறலுக்கும் செவிசாய்க்கப்போவதில்லை என முடிவெடுத்து கனவை எப்படியேனும் மெய்ப்பிக்கவேண்டும் என்ற சிந்தனையுடன் இருக்கிறார்.

கென்சட்’ எனப்படும் அனைத்துலக மாதிரி விண்வெளிப் போட்டிகளின் மலேசியப் பிரிவில் குமாரி வான்மிதா, 2021ல் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

உலகின் ஆகப்பெரிய உந்துகணை பாய்ச்சும் போட்டியான ஸ்பேஸ்போர்ட் அமெரிக்கா கிண்ணப் போட்டிகளில் 2022ஆம் ஆண்டு இவர் பங்கேற்று மலேசியக் குழுவை வழிநடத்தினார்.

‘வாவ் ராக்கெட்ரி’ என்ற அந்த அணி, அப்போட்டியில் இதுவரை கலந்துகொண்ட முதல் மலேசிய அணியாக உள்ளது.

“மலேசியாவில் முதல்முறையாக மாணவர்களால் தயாரிக்கப்பட்ட அதிக அளவு உந்துசக்தி கொண்டுள்ள உந்துகணையை எங்கள் அணி தயாரித்துள்ளது. அதற்காக நாங்கள் உலகப் பட்டியலில் 12ஆவது இடத்தைப் பிடித்தோம்,” என்று வான்மிதா கூறினார்.

யுனிவர்சிட்டி ஸனிஸ் பல்கலைக்கழகத்தில் தற்போது மூன்றாவது ஆண்டு விண்வெளிப் பொறியியல் பயிலும் குமாரி வான்மிதாவின் அடுத்த இலக்கு, வாகனமோட்டுவதற்கானச் சான்றிதழைப் பெறுவது.

பின்பு இவர் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள ‘அட்வான்சிங்எக்ஸ்’ நிலையத்தில் விண்வெளிப் பயிற்சியை மேற்கொள்ளவிருக்கிறார்.

மலேசியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையாக குமாரி வான்மிதாவை காணும் ஆவல் இவரைப் பின்தொடருவோருக்கு வெகுவாக உள்ளது.

கனவுகளைச் சுமக்கும் உள்ளங்களை நெஞ்சார வாழ்த்தும் குமாரி வான்மிதா, தடைகள் எத்தனை முளைத்தாலும் தற்காலிக இன்பத்திற்காக முயற்சியைக் கைவிடாமல் இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

கைவிட்டோமே என நினைத்து உணரும் வருத்தம், தோல்வியைக் காட்டிலும் வலிமிக்கது என்கிறார் இந்த இளம்பெண்.

“உங்களது லட்சியங்களைக் குறைகூறுபவர்கள் சாதனையாளர்கள் அல்லர், சாமானியர்கள்தான். எனவே, உங்களுக்குப் பிடித்த துறையில் சாதித்தவர்களுடன் நீங்கள் தொடர்பில் இருங்கள். திடமான எண்ணம் இருந்தால் உறுதியாக வழிபிறக்கும்,” என்கிறார் இவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here