அடுத்தவரை குறைகூறுவதற்கு முன்பு சொந்த நடவடிக்கைகளை மதிப்பிடுங்கள் -அன்வார்

 

கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 10:

கிளாந்தான் மாநிலத்தை ஒற்றுமை அரசாங்கம் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

கிளாந்தான் மாநிலத்தைப் பல ஆண்டுகளாக தீவிர இஸ்லாமியக் கொள்கைகளைக் கொண்ட பாஸ் கட்சி ஆட்சி செய்துவருகிறது.

முன்னதாக ஒற்றுமை அரசாங்கம் கிளாந்தானைப் புறக்கணித்துவிட்டதாக கிளாந்தானின் பாச்சோக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஷியாஹிர் சுலைமான் அண்மையில் குற்றம் சாட்டினார்.

நேற்று (ஆகஸ்ட்டு 9)  பொருளாதார அமைச்சர் ரஃபிசி ராம்லியுடனான விவாதத்தின்போது, முகமட் ஷியாஹிர் இவ்வாறு கூறியது உண்மைக்குப் புறம்பானது என்றார் அன்வார்.

இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தின்போது, கிளாந்தான் மாநிலத்துக்குத்தான் ஆக அதிகமான தொகை ஒதுக்கப்பட்டதை அவர் சுட்டினார். கிளாந்தானுக்கு இவ்வாண்டு 2.5 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டில் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் இருந்தபோது கிளாந்தானுக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட இது 700 மில்லியன் ரிங்கிட் அதிகமாகும்.

கிளாந்தானில் வெள்ளம் கரைபுரண்டோடியபோது கூட்டரசு அரசாங்கம் உடனடியாக உதவி செய்ததாகவும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க விரைந்ததாகவும்  அன்வார் கூறினார்.

முகமட் ஷியாஹிர் கூறுவது போல் கிளாந்தான் மாநிலத்தைக் கூட்டரசு அரசாங்கம் மாற்றான் வீட்டுப் பிள்ளையாகக் கருதவில்லை என்றார்  அன்வார்.

பாஸ் கட்சியின் உதவித் தலைமைச் செயலாளரான முகமட் ஷியாஹிருக்கும் அமைச்சர் ரஃபிசிக்கும் இடையிலான விவாதம் தேசிய அளவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

“கிளாந்தான் மாநில அரசாங்கத்தின் குறைகளைச் சுட்டிக்காட்ட முகமட் ஷியாஹிர் போன்ற இளம் தலைவர்களுக்குத் தைரியம் இருக்க வேண்டும். நிலைமையை மேம்படுத்த அவர்கள் பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும்.

“பெர்சாத்துவும் பாஸ் கட்சியும் கூட்டரசு அரசாங்கமாக இருந்தபோது கிளாந்தானுக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட எனது ஆட்சியில் கூடுதல் தொகை வழங்கப்பட்டுள்ளது.

“அக்கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது வேறு விவகாரங்களில் கவனம் செலுத்தின,” என்று அன்வார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here