பசுமையான பள்ளிப்பருவ நினைவுகள் பகிர்வு-ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி

 

கிருஷ்ணன் ராஜு, ஜோகூர்பாரு, ஆக. 20-

பள்ளிப்பருவ நினைவுகள் எப்போதும் பசுமையாகவும் மறக்க முடியாததாகவும் நம் வாழ்க்கையில் ஒன்றித்து விடுகிறது. அந்தப் பள்ளிப்பருவ காலத்திற்கு மீண்டும் திரும்பும் வகையில் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது அளவிலா மகிழ்ச்சி ஏற்படுகிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி நண்பர்கள் ஒன்றுகூடி பசுமையான பள்ளிப்பருவ நினைவுகளைப் பகிரும்போது ஈடு இணையற்ற மகிழ்ச்சியை அள்ளித் தருகிறது. அவ்வகையில் ஜாலான் யாஹ்யா தமிழ்ப்பள்ளியில் 1982ஆம் ஆண்டு ஆரம்பக் கல்வியை முடித்த முன்னாள் மாணவர்கள் நேற்று ஆகஸ்டு 19ஆம் தேதி சனிக்கிழமை ஒன்றுகூடும் நிகழ்ச்சியை நடத்தினர்.

ஆறாண்டுகள் தமிழ்ப்பள்ளிப் படிப்பை முடித்து விட்டு மேற்படிப்புக்காக மற்ற பள்ளிகளுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் சென்று விட்டனர். இவர்கள் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடும்பத்தாருடன் வாழ்ந்தும் பணிபுரிந்தும் வருகின்றனர்.

இந்த மாணவர்களுள் ஒருவரான வழக்கறிஞர் வசந்தி அந்த மாணவ நண்பர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒன்றுகூடும் நிகழ்ச்சியை நடத்தும் ஏற்பாடுகளைச் செய்தார்.

இந்தச் சந்திப்பு தாங்கள் பயின்ற ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளியில் நடந்தேறியது. 40 வருடங்கள் கழித்து இந்த நண்பர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து உணவருந்தி மகிழ்ந்த அதே வேளையில் அந்தக் கால மாணவப் பருவ நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது அவர்களுக்கு இடையிலான அன்பும் பாசமும் கரைபுரண்டோடியது. மீண்டும் பெற முடியாத அந்தப் பள்ளிப்பருவத்தை நினைத்து ஏங்கியது அவர்களின் முகங்களில் பளிச்சிட்டது.

 

 

 

 

 

 

 

இந்தச் சந்திப்பின்போது தங்களுக்குக் கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்களையும் அழைத்து இவர்கள் நல்லாசி பெற்றனர். ஆசிரியர்கள் கவிஞர் வடிவேலு, சீனிவாங்கம், பூபாலன், பெரியசாமி, நாயுடு, சண்முகம், பூங்காவனம், ருக்குமணி, அரியாநாச்சி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here