சீனாவின் போதைப்பொருள் ஒழிப்புப் படையில் புதிய ‘காலாட்படை வீரராக’ இணைந்த யானை

பெய்ஜிங்:

போதைப்பொருள் புழக்கத்தைத் தடுப்பதற்காக கடினமாக முயன்றுவரும் சீனாவின் போதைப்பொருள் ஒழிப்புப் படையில், யானை ஒன்று புதிய ‘காலாட்படை வீரராக’ இணைந்துள்ளது.

சீனாவின் தென்மேற்குப் பகுதியான யுனான் மாநிலத்தில் உள்ள காடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஓப்பியம் என்னும் போதைப்பொருளைக் கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு அது உதவியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த காணொளி ஒன்று, சீனச் சமூக ஊடகமான வெய்போவில் விரைவாகப் பரவியது. அந்தக் காணொளியை இதுவரை கிட்டத்தட்ட 200 மில்லியன் பேர் கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த யானையின் செயலைப் பாராட்டி இணையவாசிகள் அதைச் செல்லமாக ‘ரகசிய முகவர்’ என அழைத்து வருகின்றனர்.

நான்கு ஆசிய யானைகள் காட்டுக்குள் நடந்து செல்வதையும் அதில் ஒன்று ஒரு மரத்தின் அடியில் ஏதோ ஒன்றைக் கண்டு அந்த இடத்தைத் தன் தந்தத்தால் தோண்டுவதையும் அந்தக் காணொளியில் காண முடிந்தது.

அந்த யானைகளை அப்பகுதியைவிட்டு வெளியேற்ற முன்னரே அதிகாரிகள் அங்கு சென்றிருந்ததாகச் சீன தேசிய வானொலி (சிஎன்ஆர்) நிலையம் தெரிவித்தது.

மேலும், யானைகள் அந்த இடத்தைவிட்டு வெளியேறிய பின்பு அதிகாரிகள் அந்த யானை தோண்டிய இடத்திற்குச் சென்று பார்த்தனர். அங்கு ஒரு பையில் 2.8 கிலோ ஓப்பியம் இருந்ததை அதிகாரிகள் கண்டனர்.

இது குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here